தவெக தலைவர் விஜய் பாட்டிலுக்கு 10 ரூபாய் பாட்டுப்பாடி 10 நிமிடத்தில் பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டார் என்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழகத்தில் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. இந்த சம்பவம் திமுகவின் திட்டமிட்ட சதி என தவெகவினரும், இது முழுக்க முழுக்க விஜய், தவெகவினரின் தவறால் ஏற்பட்ட சம்பவம் என்று திமுகவும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. கரூர் சம்பவம் குறித்து தொடர்ந்து விளக்கம் அளித்து வரும் தமிழக அரசு அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு வருகிறது.
கரூர் சம்பவம் குறித்து செந்தில் பாலாஜி விளக்கம்
கரூர் சம்பவத்தில் செந்தில் பாலாஜியின் சதி இருப்பதாக தவெகவினர் முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த செந்தில் பாலாஜி, விஜய் மீதும் தவெகவினர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். விஜய் தாமதமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறிய செந்தில் பாலாஜி, செருப்பு வீசப்பட்ட சம்பவம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது என்றும் விளக்கம் அளித்தார்.
தவெகவினருக்கு பதிலடி
மேலும் கூட்டத்தில் அதிக ஆம்புலன்ஸ்கள் வந்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, ஆம்புலன்ஸ் வாகனங்களை தவெகவினர் தான் கூட்டத்திற்கு வரவழைத்தார்கள் என்றார். தான் உடனடியாக கரூர் மருத்துவமனைக்கு சென்றது குறித்து வந்த விமர்சனத்துக்கு பதிலளித்த அவர், 'பாதிக்கப்பட்டவர்களை பார்க்கப் போகாம, டிக்கெட் போட்டு சென்னைக்கு போகச் சொல்கிறீங்களா?' என விஜய் சென்னை சென்றதை கிண்டலடித்து பேசினார்.
பத்து ரூபாய் பாட்டில் பாடிய விஜய்
செந்தில் பாலாஜி டாஸ்மாக்கில் ஒரு மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கூடுதலாக வாங்கி பல நூறு கோடி பணம் சம்பாதித்து திமுகவுக்கு கொடுத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது குறித்து கரூரில் பிரசாரம் மேற்கொண்ட விஜய், ''பத்து ரூபாய் பாட்டில்'' பாட்டு பாடி செந்தில் பாலாஜியை கிண்டலடித்தார்.
பாட்டுப்பாடி இழப்பு ஏற்படுத்திய விஜய்
இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் இதற்கும் விளக்கம் அளித்த செந்தில் பாலாஜி, ''விஜய் பாட்டிலுக்கு 10 ரூபாய் பாட்டுப்பாடி 10 நிமிடத்தில் இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டார். பாட்டுப் பாடிய விஜய்க்கு டாஸ்மாக் நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியுமா? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
