தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களிடம் பேசி பதவி வாங்கித் தருவதாகக் கூறும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், குறுக்கு வழிகளை விட உழைப்பே உண்மையான உயர்வைத் தரும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் முகநூல் பக்கத்தில் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2002 முதல் 2005 வரை நான் மேல் படிப்பு படித்துக்கொண்டிருந்த காலம். "நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்" என்பதைப் போல நான் புரட்சித்தலைவிடமிருந்து நடுவில் விடைபெற்று இருந்த காலம் அது! அந்த சமயம் 2004 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது எனக்குத் தெரிந்த ஒரு ஒன்றிய செயலாளர், மிகச்சிறந்த மனிதர், கழகத்தின் விசுவாசி, என்னைத் தொடர்பு கொண்டார்.
"தம்பி, நான் ஒரு பயோடேட்டா தயார் பண்ணியிருக்கேன். இதை எப்படியாவது 'அம்மா' அவங்ககிட்ட கொண்டு போய் சேர்க்க உதவி செய்யுங்கள். இதை அம்மா பார்த்தா கண்டிப்பா எனக்கு சீட் கொடுத்துடுவாங்க, என்று சொன்னார்." அரசியல் களத்தின் உள்வட்டார நடைமுறைகளை அறிந்தவன் என்ற முறையில் நான் அவருக்கு உண்மையை விளக்கினேன். "சார், அம்மா அவர்கள் இப்போது முதலமைச்சர். அரசுப் பணியும் கட்சிப் பணியும் அவருக்கு மலை போல இருக்கிறது. ஒவ்வொருவர் தனிப்பட்ட முறையில் கொடுக்கும் பயோடேட்டாக்களைப் பார்க்க அவருக்கு நேரம் இருக்காது. முறையாகப் பணம் கட்டியவர்களின் விவரங்கள் மற்றும் உளவுத்துறை/நிர்வாகிகள் தரும் ரகசியப் பட்டியலை வைத்துத்தான் அவர் வேட்பாளர்களை முடிவு செய்வார். நீங்கள் நினைப்பது போல இது எளிதல்ல."
ஆனால், அவர் என் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. "எல்லோரும்'அம்மாவிடம் சேர்த்துவிடுகிறேன்' என்று சொல்கிறார்களே, நீங்கள் ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்? ’எனக்காக இந்த உதவியை செய்து தரக்கூடாதா’, என்று கேட்டார். நான் அவரிடம் தெளிவாகச் சொன்னேன், "சார், நான் அங்கேயே இருந்தவன். நடைமுறை என்னவென்று எனக்குத் தெரியும். மற்றவர்கள் ஆசை காட்டுவார்கள், ஆனால் அது நடக்காது." உடனே அவர், "உங்களால் முடியாவிட்டால் பரவாயில்லை தம்பி, நான் வேறொரு ஆள் மூலம் இதைச் செய்துகொள்கிறேன்" என்று சொல்லி போனை வைத்தார். நான் திடுக்கிட்டுப் போனேன்! ஒரு நல்ல மனிதர், எதார்த்தத்தைச் சொன்னால் ஏற்க மறுக்கிறார். யாரோ ஒரு இடைத்தரகர் அவரிடம் ஆசை காட்டி ஏமாற்றப் போகிறார் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.
இந்தச் சம்பவத்திலிருந்து நான் கற்றுக் கொண்ட உண்மைகள், நீங்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் சொல்கிறேன்:
1. உயர்மட்டத் தலைவர்களிடம் எதையும் நேரடியாகக் கொண்டு சேர்ப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், வெளியே இருப்பவர்கள் "எல்லாம் எனக்குத் தெரியும், நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லி தங்களை வளர்த்துக்கொள்வார்கள்.
2. அம்மா (புரட்சித் தலைவி) அவர்களைப் பொறுத்தவரை, அவராகக் கேட்காமல் எதையும் அவரிடம் சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை என்பது நான் பார்த்த உண்மை.
3. "தலைமையிடம் சொல்லி உங்களுக்கு பதவி வாங்கித் தருகிறேன்" என்று சொல்பவர்கள், உங்கள் ஆர்வத்தையே முதலீடாக வைத்து உங்களை ஏமாற்றுவார்கள்.
4. கசப்பான உண்மையைச் சொல்லும் நண்பனை விட, இனிப்பான பொய்யைச் சொல்லும் அந்நியனைத் தான் மக்கள் நம்புகிறார்கள்.
எனவே உங்களுக்கு நான் சொல்லும் செய்தி:"யாராவது ஒருவர் 'பெரிய இடத்தில் பேசி முடித்துத் தருகிறேன்' என்று சொன்னால், முதலில் அந்த இடத்தின் நடைமுறையை யோசியுங்கள். உழைப்பால் உயருவதை விட, குறுக்கு வழியில் நுழைய நினைக்கும் ஆசைதான் உங்களை ஏமாற்றுக்காரர்களிடம் கொண்டு போய் சேர்க்கும். உண்மை எப்போதும் கசக்கும், ஆனால் அது உங்களைக் காப்பாற்றும் என தெரிவித்துள்ளார்.


