தவெக தலைவர் பிரசாரம் செய்த கரூர் வேலுசாமிபுரம் விசாலமான இடம் என்று காவல்துறை விளக்கம் அளித்திருந்த நிலையில், அந்த இடம் குறுகிய சந்து என செந்தில் பாலாஜி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
வேலுசாமிபுரம் குறுகிய இடம்
கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த இடம் கரூர் வேலுசாமிபுரம் ஆகும். மிகவும் நெருக்கடியான, குறுகலான இடத்தில் விஜய் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி வழங்கியதால் தான் சம்பவம் நடந்ததாக தவெகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஸ்டாலின், உதயநிதி பிரசாரம் செய்ய விசாலமான இடம் வழங்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடியான இடம் வழங்குகின்றனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.
காவல் துறை மறுப்பு
அதே வேளையில் தவெவினர் குறுகலான இடம் கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் இந்த இடம் வழங்கப்பட்டது. இது விசாலமான இடம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதேபோல் பல்வேறு திமுக உடன்பிறப்புகளும் விசாலமான இடத்தை தான் விஜய் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி அளித்துள்ளது என்று கூறி அதற்குரிய புகைப்படங்களையும் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தனர்.
செந்தில் பாலாஜி பேசிய வீடியோ
இந்நிலையில், கரூர் மாவட்டத்தையே கட்டி ஆளும் முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி, கரூர் வேலுசாமிபுரம் குறுகிய இடம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே இடத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து செந்தில் பாலாஜியை கடுமையாக தாக்கி பேசிருந்தார். இபிஎஸ் பிரசாரம் செய்த அந்த வேலுசாமிபுரம் குறுகிய இடம் என்பதை செந்தில் பாலாஜி நக்கலடித்து பேசினார்.
வேலுசாமிபுரம் அமைந்துள்ள பகுதி
இது தொடர்பாக செந்தில் பாலாஜி கூறுகையில், ''காலையில் (சில தினங்களுக்கு முன்பு) எஸ்கேடி மஹாலில் (வேலுசாமிபுரம் அமைந்துள்ள பகுதி) ஒரு வளைகாப்புக்கு சென்றோம். அந்த ரோடே 60 அடி அல்லது 80 அடி தான் இருக்கும். அதில் இருபக்கமும் தலா 15 அடி பேனர்கள் வைத்துள்ளனர். மீதி 30 அடி தான் இருக்கும். அப்போ 30 அடிக்கு ஆட்களை எப்படினாலும் நிறுத்தலாம்.
குறுக்கு சந்தில் பிரசாரம் செய்த இபிஎஸ்
இந்த குறுக்கு சந்தில் பிரசாரம் (இபிஎஸ் பிரசாரம்) நடத்தி விட்டு வடிவேலு ஒரு படத்தில் சொல்லுவார்ல அந்த மாதிரி சில அரசியல் கட்சிகள் எல்லாம் இருக்கு. ஆனால் பேசுகிற வசனம் மட்டும் காதில் கேட்க முடியாத அளவுக்கு பேசுகின்றனர். நாம் யாரை பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. எந்த அரசியல் இயக்கம் பற்றியும் யோசிக்க வேண்டியதில்லை'' என்றார். தவெகவுக்கு அகலமான இடம் வழங்கினோம் என காவல்துறை கூறிய நிலையில், செந்தில் பாலாஜி பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
