நீட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

நீட் தேர்வு, ஓராண்டுக்கு விலக்கு என்பது தமிழகத்தை ஏமாற்றும் வேலை என்றும், மாநிலத்தை ஆக்கிரமிக்கும் விதமாக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜன் கூறியுள்ளார்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு விலக்களிக்கப்படும் என்றும், நிரந்தர விலக்கு என்பது கிடையாது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

மேலும், நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு என்பது தமிழக அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறியிருந்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக மாணவர்களுக்கு ஆறுதலும், மகிழ்ச்சியையும் அளித்த பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு, தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்தார். 

மத்திய அரசு நல்ல அறிவிப்பை அறிவித்துள்ளது என்று கூறினார். தமிழகத்துக்கு நீட் ஓராண்டுகால விலக்கு குறித்து,  தமிழக அரசின் சட்ட முன் வடிவு, நாளை மத்திய அரசிடம் வழங்கப்படும் என்றார்.

இந்த நிலலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்றார். 

தற்போது பொதுத்தேர்வை சந்திக்கும் வகையில் மாணவர்களை தயார்படுத்தி வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.