அதிமுக ஒன்றிணைவது தொடர்பாக கட்சி தலைமைக்கு நான் 10 நாள் கெடு விதிக்கவில்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இபிஎஸ்க்கு எதிராக ஆவேசமாக கிளம்பிய செங்கோட்டையன் பின்பு சைலண்ட் மோடுக்கு சென்றதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வரும் நிலையில், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் அவருக்கு எதிராக உள்ளனர்.
எடப்பாடிக்கு 10 நாள் கெடு விதித்த செங்கோட்டையன்
இதேபோல் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வெகுண்டெழுந்தார். எடப்பாடிக்கு எதிராக செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் அனைவரும் ஒன்றியணைய வேண்டும் என்று கூறியதுடன் ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். இதனால் கோபம் அடைந்த இபிஎஸ் செங்கோட்டையனின் பதவியை பறித்தார்.
அமித்ஷாவையும் சந்தித்து பேச்சு
செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த பரபரப்புக்கு இடையே டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன், ''அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதிமுக வலுவடைய வேண்டும் என்று அமித்ஷாவிடம் கூறினேன். அதிமுக வலிமை பெற தொடர்ந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வேன்'' என்று கூறியிருந்தார்.
பின்பு சைலண்ட் மோடுக்கு சென்ற செங்கோட்டையன்
ஆனால் அதன்பிறகு செங்கோட்டையன் அமைதியானார். எடப்பாடிக்கு எதிராகவும், அதிமுக தலைமைக்கு எதிராகவும் அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. கரூர் கூட்ட நெரிசல் சம்பவதுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் கருப்பு பட்டை அணிந்து சென்றபோது செங்கோட்டையனும் கருப்பு பட்டை அணிந்து சென்றிருந்தார்.
நான் இபிஎஸ்க்கு கெடு விதிக்கவில்லை
எடப்பாடிக்கு எதிராக ஆவேசமாக பொங்கியெழுந்த செங்கோட்டையன் அதன்பின்பு அமைதியானது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம், அதிமுக தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ''அதிமுக ஒன்றிணைவது குறித்து நான் கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு ஏதும் விதிக்கவில்லை.
நான் கூறியது இதுதான்
ஊடகங்கள் அதை தவறாக புரிந்து கொண்டு செய்தி வெளியிட்டுள்ளன. அதிமுக ஒன்றிணைவது தொடர்பாக 10 நாளில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். அதன்பின்பு ஒன்றரை மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று தான் தெரிவித்தேன்'' என்றார்.
செங்கோட்டையன் அமைதிக்கு பின்னால் பாஜக
ஓபிஎஸ், சசிகலா, டிடிவியை சேர்த்து அதிமுக ஒன்றிணையாமல் விட மாட்டேன் என எடப்பாடிக்கு எதிராக ஆவேசமாக கிளம்பிய செங்கோட்டையன் பின்பு சைலண்ட் மோடுக்கு சென்றதன் பின்னணியில் பாஜக உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். டெல்லி சென்ற செங்கோட்டையனிடம் அமித்ஷா, ''இப்போது தேர்தலில் வெற்றி பெறுவது தான் முக்கியம். இப்போது கட்சியில் கலகம் உண்டானால் அது திமுகவுக்கு சாதகமாகி விடும்'' என்று கண்டித்ததாகவும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
