Selam railway line will soon be the best of Indian Railways.
சேலம்
சேலம் இரயில்வே கோட்டம் விரைவில் இந்திய இரயில்வேயின் தலைசிறந்த கோட்டமாக விளங்கும் என்று இரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்தார்.
தெற்கு இரயில்வே சேலம் கோட்ட அலுவலகம் அருகே உள்ள கலையரங்கத்தில் 63-வது இரயில்வே வார விழா கொண்டாடப்பட்டது. இதில், ஊழியர்களின் குழந்தைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்த விழாவுக்கு கோட்ட இரயில்வே மகளிர்நல அமைப்பின் தலைவர் அனிதா வர்மா, முதுநிலை கோட்ட ஒருங்கிணைப்பு பொறியாளர் பெருமாள் நந்தலால், பணியாளர் நல அதிகாரி திருமுருகன், முதுநிலை நிதி ஆலோசகர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட கூடுதல் மேலாளர் சந்திரபால் வரவேற்றார்.
இந்த விழாவில் இரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தலைமை தாங்கி பேசியதாவாது:- "சேலம் இரயில்வே கோட்டம் விரைவில் இந்திய இரயில்வேயின் தலைசிறந்த கோட்டமாக விளங்கும்.
ஏற்காட்டில் தற்போது புதியதாக ஊழியர் ஓய்வு இல்லம் கட்டப்பட்டுள்ளது. சேலம் மற்றும் ஊட்டியில் ஊழியர் இல்லங்களின் அறைகள் விரிவுப்படுத்தப்படும்.
தெற்கு இரயில்வே மகளிர் நல அமைப்பு சேலம் மற்றும் ஈரோட்டில் உள்ள இரயில்வே பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ரூ.10 இலட்சம் நிதி வழங்கியுள்ளனர்.
தொடர்ந்து சேலம் கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 14 துறைகளுக்கு சுழற்கேடயங்கள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பாக பணியாற்றிய 391 சேலம் கோட்ட ஊழியர்கள் மற்றும் 24 அதிகாரிகளுக்கு ஹரிசங்கர் வர்மா சான்றிதழ்களையும், ரொக்கப் பரிசையும் வழங்கினார்.
விழாவில் முதுநிலை வணிக மேலாளர் விஜூவின், கோட்ட வணிக மேலாளர் மாது, உதவி வணிக மேலாளர் ஷாஜகான் மற்றும் சேலம் கோட்ட ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
