உதயநிதி பேச்சை வேடிக்கை பார்த்த சேகர்பாபு பதவி விலக செப் 10 வரை கெடு: அண்ணாமலை
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 10ஆம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் என்கிறார் அண்ணாமலை.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு, உதயநிதி ஸ்டாலின் சநாதனம் குறித்துப் பேசியதை மறுக்காத இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அண்ணாமலை.
தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை ட்விட்டரில் இதுபற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "சனாதன ஒழிப்பு குறித்த கூட்டத்தில், சனாதன தர்மமும் இந்து மதமும் ஒன்றே என்பதை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உறுதிப்படுத்தினார்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.
"பின்னர் அதே கூட்டத்தில் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். இந்து மதத்திற்கு எதிரான இந்த வெறுப்புப் பேச்சின் போது, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் மேடையில் இருந்தார்" என்றும் அமைச்சர் சேகர்பாபு உதயநிதி பேச்சை மறுக்காமல் மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தார் என்றும் குறைகூறியுள்ளார்.
பிரதமர் மோடி 9 வருஷமா ஒரு நாள் கூட லீவு எடுக்கலயாம்! உழைத்துக்கொண்டே இருக்கிறாராம்!
இதனால், மாநிலத்தின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகத் தொடரும் தார்மீக உரிமையை சேகர் பாபு இழந்துவிட்டார் என்றும் உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்றும் அண்ணாமலை தனது ட்வீட்டில் சொல்கிறார்.
செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் அவர் பதவி விலகவில்லை என்றால், செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் உட்பட மாநிலத்தில் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்களை பாஜக தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாகவும் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் 'சனாதன ஒழிப்பு மாநாடு' நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சநாதன தர்மத்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
"இந்த மாநாட்டின் தலைப்பே என்னைக் கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். அந்த வகையில், சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கொசு, டெங்கு, கொரோனா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும். அதை எதிர்க்க கூடாது ஒழிக்க வேண்டும். அதுதான் நாம் செய்யவேண்டியது." என்று வலியுறுத்தினார்.
2 மணிநேரத்தில் 61,000 மின்னல்கள்... 12 பேர் பலி... ஒடிசாவை மிரட்டிய அசாதாரண வானிலை!