2 மணிநேரத்தில் 61,000 மின்னல்கள்... 12 பேர் பலி... ஒடிசாவை மிரட்டிய அசாதாரண வானிலை!
ஒடிசாவில் 2 மணிநேரத்தில் சுமார் 61 ஆயிரம் மின்னல்கள் ஏற்பட்டுள்ளன. இதில் மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் முழுவதும் சனிக்கிழமையன்று 61,000 மின்னல் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள் ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இந்திய வானிலை மையம், செப்டம்பர் 7ஆம் தேதி வரை ஒடிசா மாநிலம் முழுவதும் தீவிரமான வானிலை இருக்கும் என்று எச்சரித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும் என்றும், அதன் தாக்கத்தால், ஒடிசா முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
"வாரத்தின் பிற்பகுதியில் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. செப்டம்பர் 7 வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று இந்திய வானிலை மையம் மேலும் கூறியுள்ளது.
23 வயதில் 100 கோடிக்கு அதிபரான வேதாந்த் லம்பா! ஆசியாவின் மிகப்பெரிய கடையை உருவாக்கிய இளைஞர்!
சனிக்கிழமை மின்னல் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் நான்கு பேர் குர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பலங்கிரில் 2 பேரும் அங்குல், பௌத், தேன்கனல், கஜபதி, ஜகத்சிங்பூர் மற்றும் பூரியைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவரும் மின்னலுக்கு பலியாகியுள்ளனர் என்று சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தவிர, கஜபதி மற்றும் கந்தமால் மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் எட்டு கால்நடைகளும் இறந்துள்ளன.
உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒடிசா அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் சத்யபிரதா சாஹு கூறினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பருவமழை இயல்பு நிலைக்குத் திரும்புவதால், இந்த அசாதாரணமான சூழல் ஏற்படுவதாக வானிலை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். குளிர்ந்த மற்றும் சூடான காற்று மோதுவதால் இதுபோன்ற தொடர் மின்னல்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது என்று அவர்கள் சொல்கின்றனர்.
நடுவானில் எகிப்து விமானத்துக்கு உதவி செய்த இந்திய விமானப்படையின் எரிபொருள் விமானம்!