சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் மூலம் கடத்த முயன்ற ரூ.25 லட்சம் ஹவாலா பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, சென்னையை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் சர்வதேவ முனையத்தில் இருந்து நேற்று இரவு 11.35 மணிக்கு கொழும்பு வழியாக சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, சென்னையை சேர்ந்த ஒரு வாலிபர், சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணியாக செல்ல வந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதிர் கருப்பு நிற பிளாஸ்டிக் கவர் சுற்றிய பார்சல் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, கட்டு கட்டாக அமெரிக்கா மற்றும் யூரோ கரன்சிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதன் இந்திய மதிப்பு ரூ.25 லட்சம்.
இதை தொடர்ந்து அதிகாரிகள், வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்து, அந்த வாலிபரை தனி அறையில் வைத்து விசாரித்தனர். அதில், கைப்பற்றப்பட்ட பணம், கணக்கில் காட்டப்படாத ஹவாலா பணம் என தெரிந்தது. சென்னையை சேர்ந்த யாரோ, சிங்கப்பூரில் உள்ள ஒருவருக்கு கொடுக்க இருந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்தனர்.
மேலும், பணத்தை கொடுத்து அனுப்பியது யார், யாரிடம் கொடுக்க இருந்தார் என அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
