மாற்று மதத்தினர் பழனி முருகனை வழிபட தடையா.? உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்க- சீமான்

மாற்று மதத்தினர் இந்துவாக மதம் மாறினால் ஏற்றுக்கொள்ள கூடியவர்கள், மாற்று மதத்தினர் தங்கள் இறைவனை வணங்க மட்டும் அனுமதி மறுப்பது எவ்வகையில் நியாயமாகும்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Seeman request to appeal in the Supreme Court against the ban on visiting Palani Murugan Temple by people of different faiths KAK

பழனி கோவில் தடை- சீமான் ஆவேசம்

பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபட தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் விதித்து உத்தரவு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் இறையோன், குறிஞ்சி நிலத் தலைவன், முப்பாட்டன் முருகனின் பழனி திருக்கோயிலுக்குள் சென்று வழிபட இந்து அல்லாத மக்களுக்கு அனுமதி மறுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை அளித்துள்ள தீர்ப்பு பெரும் அதிர்ச்சியும், மன வேதனையும் அளிக்கிறது.

மாற்று மதத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் தமக்கு விருப்பமான இறைவனை வழிபட அனைவருக்கும் உரிமை உண்டு எனும் நிலையில் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. முருகனை இந்து கடவுள் என்று யார் தீர்மானித்தது? இந்து என்ற வார்த்தையே இல்லாத சங்க இலக்கியங்களிலேயே முருக வழிபாடு பற்றிய செய்தியுள்ளது. 

Seeman request to appeal in the Supreme Court against the ban on visiting Palani Murugan Temple by people of different faiths KAK

இந்துக்கள் மட்டுமே வழிபட வேண்டுமா.?

முருகனை இந்து கடவுள் என்பதும், இந்துக்கள் மட்டுமே முருகனை வழிபட வேண்டும் என்பதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழர் முப்பாட்டன் முருக வழிபாடு என்பது சிறந்து விளங்குகிறது. இசுலாமியர் பெரும்பான்மையாக வாழும் மலேசியாவின் பத்து மலை முருகனை சீனர்கள் அதிகம் வழிபடுகின்றனர்? நம் இறைவனை அனைவரும் வழிபடுவது என்பது பெருமைதானே ஒழியே, இழிவல்ல!

தமிழர்களின் தனிப்பெரும் சமயமாம் சைவ சமயத்தில், இறைவன் சிவன் மீது பக்திகொண்டு வழிபட்ட பௌத்த மதத்தைச் சார்ந்த சாக்கிய நாயன்மாரையும் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட அடியவர்களான 63 நாயன்மார்களில் ஒருவராக அங்கீகரித்து, ஒவ்வொரு சிவன் கோயிலுக்குள்ளும் அவரது சிலையை வைத்து வழிபடும் மண் தமிழர் மண். அப்படிப்பட்ட பரந்துபட்ட மனித மாண்பினை உடைய தமிழர் மெய்யியல் மரபினை சிதைப்பதென்பது எவ்வகையில் நீதியாகும்? 

Seeman request to appeal in the Supreme Court against the ban on visiting Palani Murugan Temple by people of different faiths KAK

மதுக்கடையில் சாதி, மதம் பார்ப்பதில்லை

தமக்கு விருப்பமான இறைவனை வழிபடுவது என்பது தனிமனித அடிப்படை உரிமையாகும். அதனை மறுப்பதென்பது பெருங்கொடுமையாகும். படிக்கப் போகும் பள்ளிக்கூடத்தில் சாதி, மதம் பார்ப்பது, கும்பிட போகும் கோயிலுக்குள் சாதி, மதம் பார்த்து ஒதுக்கி வைப்பதென்பது மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயலாகும். எல்லாவற்றிலும் சாதி, மதம் பார்க்கும் பெருந்தகைகள் குடிக்கப்போகும் மதுக்கடைகளில் மட்டும் சாதி-மதம் உள்ளிட்ட எவ்விதப் பாகுபாடும் பார்ப்பதில்லையே ஏன்?  மாற்று மதத்தினர் இந்துவாக மதம் மாறினால் ஏற்றுக்கொள்ள கூடியவர்கள், மாற்று மதத்தினர் தங்கள் இறைவனை வணங்க மட்டும் அனுமதி மறுப்பது எவ்வகையில் நியாயமாகும்?  நம்பிக்கை உடையவர்கள் மட்டும்தான் வழிபட அனுமதி என்றால் ஒருவர் நம்பிக்கை உடையவரா இல்லையா என்பதை எந்த அளவுகோல் மூலம் சட்டம் அளவிடப்போகிறது? 

Seeman request to appeal in the Supreme Court against the ban on visiting Palani Murugan Temple by people of different faiths KAK

சட்ட ஒழுங்கு பிரச்சனை என்ன.?

உறுதிமொழி அளித்தால் உள்ளே அனுமதிக்கலாம் என்றால் உறுதிமொழியின் உண்மைத்தன்மையை யார் உறுதி செய்வது?  மாற்று மதத்தைச் சேர்ந்தவர் அறநிலையத்துறை அதிகாரி என்றால் அவரை கோயிலுக்குள் அனுமதிப்பீர்களா? மாட்டீர்களா? இத்தனை ஆண்டுகாலமாக மாற்று மதத்தினர் பழனி முருகனை வழிபட்டதால் இந்தச் சமூகத்தில் ஏற்பட்ட சாதி-மத கலவரம் என்ன? சட்டம்-ஒழுங்கு சிக்கல் என்ன? திடிரென்று இப்போது தடை செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதில் உண்டு?  தமிழ்நாட்டில் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோயில், சிக்கல் சிங்காரவேலன் கோயில் என்று அனைத்து மதத்தினரும், அனைத்து மத கோயில்களுக்கும் சென்று வழிபடக்கூடிய மரபணுவிலேயே மதநல்லிணக்கம் நிலைத்திருக்கும் தமிழ் மண்ணில், 

Seeman request to appeal in the Supreme Court against the ban on visiting Palani Murugan Temple by people of different faiths KAK

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திடுக

மனதிற்கு நெருக்கமான ஆண்டவனை வழிபட மனிதன் உருவாக்கியச் சட்டங்களால் தடை ஏற்படுத்துவது என்பது பிரிவினைக்கு வழிவகுத்து, மக்கள் மனங்களில் உள்ள மதப் பாகுபாடுகளை அதிகரிக்குமேயன்றி ஒருபோதும் குறைக்கப்போவதில்லை. அதைத்தான் நீதிமன்றம் விரும்புகிறதா?மாண்பமை உயர்நீதிமன்றமே இதற்கு வழியேற்படுத்துவதுதான் வேதனையின் உச்சமாகும்.  

ஆகவே, மக்கள் மனதில் மத வெறுப்பினை விதைக்க வழிவகுக்கும், பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை விதிக்கும் மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

Breaking: பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத பிற மதத்தினருக்கு அனுமதி கிடையாது - நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios