விஜயலட்சுமி பாலியல் புகார்..! மனைவியோடு விசாரணைக்கு ஆஜரான சீமான்- காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தொண்டர்கள்
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்காக தனது மனைவியோடு சீமான் இன்று ஆஜரானார்

சீமான் மீது விஜயலட்சுமி புகார்
வாழ்த்துக்கள் என்ற திரைப்படத்தின் இயக்குனராக சீமான் பணியாற்றிய போது அந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். அப்போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். மேலும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் சீமானை கடுமையாக விமர்சித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு இருந்தார்.
10 வருடங்களுக்கு பிறகு மீண்டு்ம் பரபரப்பு
நீண்ட காலமாக நீடித்து வந்த இந்த பிரச்சனை ஆனது கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பாக மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விஜயலட்சுமி மீண்டும் புகார் ஒன்று தெரிவித்திருந்தார். சீமான் தன்னை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும், இதனையடுத்து தாங்கள் ஒன்றாக இருந்த்தாகவும், ஐந்து முறை கர்ப்பம் ஆனதாகும் தெரிவித்தார். ஆனால் சீமானின் வற்புறுத்தல் காரணமாக கருக்கலைப்பு செய்து கொண்டதாக விஜயலட்சுமி தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரை அடுத்து வளசரவாக்கம் போலீசார் விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு ஆஜராக போலீசார் சார்பாக இரண்டு முறை சம்மன் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு சென்ற விஜயலட்சுமி இந்த வழக்கை திரும்ப பெறுவதாக கூறி பெங்களூருக்கு சென்று விட்டார்.
விசாரணைக்கு ஆஜரான சீமான்
இருந்த போதும் சீமானுக்கு அனுப்பிய சம்மன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென போலீசார் தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து இன்று காலை தனது மனைவியுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக சீமான் வந்தார். இந்த தகவலை அறிந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் காவல் நிலையத்திற்கு முன்பாக கூடினர். இதனால் அந்த பகுதியே பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து நாம் தமிழர் கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்தினர். இருந்தபோதும் காவல்துறையினர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்