Asianet News TamilAsianet News Tamil

கோவையில் ரூ.11 கோடியில் இரண்டாவது கட்ட குப்பை தரம்பிரிப்பு நிலையம் அமைக்கப்படும் – அதிகாரிகள் அறிவிப்பு…

Second phase garbage plant to be set up at Rs.11 crores in Coimbatore
Second phase garbage plant to be set up at Rs.11 crores in Coimbatore
Author
First Published Jun 15, 2017, 8:57 AM IST


கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் ரூ.11½ கோடி செலவில் இரண்டாவது கட்ட குப்பை தரம்பிரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் தினமும் ஆயிரம் டன்கள் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.

மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரிக்கப்பட்டு அள்ளுவதாக கூறப்பட்டாலும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் முழுமை அடையாமலும், சரியாக செயல்படுத்தப்படாமலும் உள்ளது.

கோவை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் 750 ஏக்கர் பரப்பளவில் உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

வெள்ளலூர் குப்பைக் கிடங்கினால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், ஈக்கள், கொசு பரவுவதால் சுகாதார பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் வெள்ளலூர் மற்றும் கோணவாய்க்கால் பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை:

“கோவை நகரில் தினமும் சேரும் 1000 டன்கள் குப்பையில், 500 டன்கள் குப்பை ஏற்கனவே உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில் 100 டன்கள் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. மீதம் உள்ள 400 டன்கள் குப்பையை கையாள இரண்டாவது கட்ட குப்பை தரம்பிரிப்பு நிலையத்தை ரூ.11½ கோடி செலவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு தேவைப்படும் நிதி உதவியை சீர்மிகு நகர் திட்டத்தில் (ஸ்மார்ட் சிட்டி) வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி உதவியை கொண்டு, சுற்றுச்சுவர், அலுவலக கட்டிடம், மின்சார வசதி, எலெக்ட்ரானிக் எடை அளவு கண்காணிப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி ஒப்பந்தம் விரைவில் கோரப்படும்.

புதிதாக அமைக்கப்படும் குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையத்தில், பயோ கியாஸ் தயாரிக்கவும், பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பாட்டில்கள் தயாரிக்கவும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

கோவை நகரம் விரிவடைந்து வருவதாலும், நகரில் நாளுக்குநாள் குப்பைகள் அதிக அளவில் சேர்ந்து வருவதாலும், இரண்டாவது கட்ட குப்பை தரம்பிரிப்பு திட்டம் அவசியம் ஆகும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios