கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலை., துணை வேந்தர் தொடர்புடைய இடங்களில் சோதனை!
ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன். இவர், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, விதிகளை மீறி சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக இருந்த இளங்கோவன் என்பவர், கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இதுதொடர்பான விசாரணையில் அரசு நிதியை அவர் தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் போலீஸார் அவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் தொடர்புடைய இடங்களில் 7 இடங்களில் காவல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் அறை, அவரது இல்லம், விருந்தினர் விடுதி, பதிவாளர் அலுவலகம், பதிவாளர் இல்லம் மற்றும் சூரமங்கலம் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, ஜெகநாதன் மீது மேலும் சில புகார்கள் கூறப்பட்டிருந்த நிலையில், அவற்றின் மீதும் வழக்குப்பதிவு செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.