2024 மக்களவை தேர்தல்: ராமர் கோயில் கும்பாபிஷேகம் முடிந்தவுடன் வேட்பாளர் பட்டியல் - பாஜக புது வியூகம்!
2024 மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை முன் கூட்டியே வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி எனும் பெயரில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்த கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் உள்ளன. இரண்டு முறை ஆட்சியில் இருந்ததால் பொதுவாகவே பொதுமக்களிடம் ஏற்படும் ஆட்சிக்கு எதிரான மனநிலை, எதிர்க்கட்சிகளின் கூட்டணி உள்ளிட்டவைகள் பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, பாஜக கை ஓங்கியிருப்பதாகவே கூறப்படுகிறது. அதேபோல், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளும் பாஜகவுக்கு சாதகமாகவே உள்ளன.
இதனை எதிரொலிக்கும் விதமாக நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன. ஐந்தில் மூன்று மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. 2024 தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட இந்த தேர்தல் முடிவுகள், பாஜக மேலிடத்துக்கும் தொண்டர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள கையோடு மக்களவை தேர்தலுக்கான பணிகளையும் பாஜக தொடங்கியுள்ளது.
அந்த வகையில், 2024 மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை முன் கூட்டியே வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ராமர் கோயில் கும்பாபிஷேகம் முடிந்தவுடன், மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
2024 மக்களவை தேர்தல்: விளம்பர நிறுவனங்களின் உதவியை நாடும் அரசியல் கட்சிகள்!
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பாஜக வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கியது. இதன் மூலம், வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய கூடுதல் நேரமும் வாய்ப்பும் கிடைக்கும். சீட் கிடைக்காத அதிருப்தியாளர்களை சமாதானம் செய்ய போதிய கால அவகாசமும் கிடைக்கும் என்பதால், தேர்தலில் ஒன்றுபட்டு செயல்பட முடியும்.
இந்த வியூகம் பஜகவுக்கு கைகொடுத்ததையடுத்து, அதே வியூகத்தை மக்களவை தேர்தலிலும் அக்கட்சி பயன்படுத்தவுள்ளதாக கூறுகிறார்கள். சமீபத்தில் டெல்லியில் இரண்டு நாட்கள் பாஜக தேசிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், இந்த வியூகம் குறித்தும் எந்த அளவிற்கு உதவிகரமாக இருந்தது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டங்களாக வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் முதல் இரண்டு பட்டியல்கள் வெற்றி வாய்ப்பை 90 சதவீதத்திற்கு மேல் அளித்திருப்பதாக தேர்தக்ல் முடிந்த மாநில நிர்வாகிகள் தெரிவித்துள்ளது பாஜக மேலிடத்துக்கு உத்வேகத்தை அளித்துள்ளதாக தெரிகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களவை உறுப்பினர்கள் பலர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர். எனவே, வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர்களை ஆட்சியின் சாதனையை காட்டி 2024 மக்களவை தேர்தலில் களமிறக்கவும், அரசு நிர்வாக பொறுப்பில் உள்ள சிலரை ராஜ்யசபா உறுப்பினராக்கவும், மூத்த தலைவர்கள் சிலரை ஓரங்கட்டவும் பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.