சுங்குவார்சத்திரம் அருகே முன் பக்க பேருந்திலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவர் மீது பின் பக்க பேருந்து சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

சுங்குவார்சத்திரத்தை அடுத்த திருமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் விஜி. இவரது மகன் ஹரிகரன் (12). சுங்குவார்சத்திரத்தை அடுத்த பண்ணூரில் உள்ள டான்போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் தினமும் பள்ளிக்கு அரசுப் பேருந்தில் சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்கு சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக ஹரிகரன் உள்ளிட்ட பல்வேறு மாணவர்கள் காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த தடம் எண் டி-84 அரசு பேருந்தில் மாணவர்கள் முந்தியடித்து ஏறினர். இதில் முன்பக்க படிக்கட்டு வழியாக ஏறிய ஹரிகரன் தவறிவிழுந்தார். அப்போது, பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சுங்குவார்சத்திரம் காவல்துறையினர், மாணவரின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பேருந்து ஓட்டுநர் ஆண்டியப்பனை (40) கைது செய்து சிறையில் அடைத்தனர்.