School student died bacause of dengue
திருப்பூர்
காங்கேயத்தில் பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலால் பலியானா சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஏ.சி.நகரைச் சேர்ந்த கைத்தறி நெசவு தொழிலாளி கந்தசாமி. இவருடைய மனைவி மல்லிகா. இவர்களுடைய மகன் வசந்தரூபன் (13).
வசந்தரூபன் காங்கேயம் பாரதியார் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8–ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல், முகம் மற்றும் உடம்பில் பல இடங்களில் லேசான வீக்கம் ஏற்பட்டதால் காங்கேயத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு மாணவன் வசந்தரூபனின் இரத்த மாதிரி எடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அந்த மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரிந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவனை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், நேற்று முன்தினம் காலை அந்த மாணவனை கோவை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று அவரது பெற்றோர் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்ததில் மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் நேற்று அதிகாலை வசந்தரூபன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து வசந்த ரூபனின் உடலை காங்கேயம் கொண்டுச் சென்று அங்குள்ள இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
காங்கேயத்தில் பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
