ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பான பணிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.

எனினும் அதற்கு அடுத்த நாள் ஜனவரி 3ஆம் தேதி அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. முதல் நாள் இரவு முழுவதும் பணியாற்றிவிட்டு மறுநாள் சோர்வுடன் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய சூழல் உருவாகும் என்று பல ஆசிரியர்களும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், “தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணி ஜனவரி 2ஆம் தேதி நள்ளிரவு வரை நடைபெற வாய்ப்பு உள்ளது. ஆகவே, பள்ளிகளை ஜனவரி 3ஆம் தேதிக்கு பதிலாக ஒருநாள் தள்ளிவைத்து ஜனவரி 4ஆம் தேதி திறந்திட வேண்டும்.

2020ஆம் ஆண்டின் முதல்வேலை நாளை புத்துணர்வோடு தொடங்க ஏற்ற சூழல் இருக்காது என்பதால் இந்த கோரிக்கையினை பரிசீலிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி, அதுபோன்ற எந்த கோரிக்கையும் தங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க அரசுக்கு வலியுறுத்த ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தால் பரிசீலனை செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பிறகு ஜனவரி 4 ஆம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.