விருதுநகர்

இராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியில் தண்ணீரின்றி வாடும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறக்க வேண்டும், இல்லையெனில் எங்களுக்கு தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் சிவஞானத்திடம் தெற்கு தேவதானம் நகரியாறு உபவடிநிலம், பெரியகுளம் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், “தேவதானம், சாஸ்தா கோவில் நகரியாற்றுத் தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறோம். நாங்கள் உழவுத் தொழிலை நம்பியே வாழ்கிறோம். சிறு விவசாயிகளான எங்களுக்கு கிணற்றுப் பாசன வசதி கிடையாது. ஒரு சில விவசாயிகளுக்கு கிணற்றுப் பாசன வசதி இருந்தாலும் கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் பயிர்களை காப்பாற்ற முடியாமல் போகிறது. விவசாயத்திற்காக வாங்கிய கடனுக்கு வட்டி கூட கொடுக்க முடியாமல் தவிக்கிறோம்.

தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதுகுறித்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்துள்ளோம். ஆனால், எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

எங்கள் பகுதி விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க நீர் வளத்தை பெருக்க எதிர்கால திட்டம் தேவைப்படுகிறது. இப்போதைக்கு எங்கள் நெருக்கடியினைப் புரிந்து கொண்டு கருகிவரும் பயிர்களை காப்பாற்ற சாஸ்தா கோவில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். அதன் மூலம் தான் பயிர்களை காப்பாற்ற முடியும். இல்லையெனில் தற்கொலை பாதையை தவிர வேறு வழியும், விடிவும் எங்களுக்கு தெரியவில்லை.

விவசாயிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு தேவதானம், கோவிலூர், சேத்தூர், முகவூர், தளவாய்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நிலைமையை அரசுக்கு தெரியப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.