காவல் துறையை பார்த்து குற்றவாளிகளுக்கு அச்சமில்லை.. முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்
பெரம்பலூர் அருகே காவல் துறையினரின் வாகனம் மீது வெடிகுண்டு வீசி விசாரணை கைதி மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு
தமிழக சட்டமன்றத்தில் இன்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தன் முதுகை தானே தட்டிக்கொண்டு பெருமை பேசி வந்த நேரத்தில், திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள்.
4 காவலர்கள் படுகாயம்
பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை காவலர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லும் போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த வெடிகுண்டு வீச்சில் ரவுடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அரசை பார்த்து அஞ்சாத குற்றவாளிகள்..
குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ கிஞ்சித்தும் அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைக்கும் நிலையில், ஆட்சி சக்கரத்தை ஏனோ தானோ என்று சுழற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார் என்று தெரியவில்லை. காவல்துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

