விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பட்டாசுகள் வெடித்து கொண்டே இருப்பதால் மீட்புப் பணியில் ஈடுபடுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வரகனூரில் பட்டாசு தயாரிக்கும் பணி உரிமத்துடன் செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் திடீரென தயாரிப்பின் போது ஒரு அறையில் பட்டாசுகள் வெடிக்க தொடங்கியது. இது அடுத்தடுத்து மற்ற அறைகளுக்கும் உடனே பரவியது.  

இந்த விபத்தில் ஆலையில் உள்ள அனைத்து அறைகளும் தரைமட்டமானது. இதில் 4 பெண்கள் உட்பட 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

உடனே இதுதொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும்போது இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகை பட்டாசுக்கள் தயாரிக்க அதிக வீரியம் கொண்ட ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது.