தஞ்சையில் சசிகலா, திவாகரன், டிடிவி தினகரன் ஆகியோர் ஓ.பி.எஸ். ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை பற்றவைத்துள்ளது. தலைமைக்கு அச்சுறுத்தல் வருமோ என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலக்கத்தில் உள்ளார்.

Sasikala, TTV meet Vaithilingam: அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்திலிங்கம், அண்மையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரத்தநாடு வீட்டில் தற்போது ஓய்வெடுத்துவரும் வைத்திலிங்கத்தை, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று (10ஆம் தேதி) சந்தித்தார். 

அதை தொடர்ந்து வி.கே. சசிகலா, அவரது சகோதரர் திவாகரன் ஆகியோரும் வைத்திலிங்கத்தை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். பின்னர் பேட்டியின்போது சசிகலா சொன்ன விஷயங்கள்தான் தற்போது எடப்பாடி பழனிசாமியின் தூக்கத்தை கெடுத்துள்ளது. 

சசிகலா செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்களின் இந்த சந்திப்பு என்பது அனைத்தும் கலந்தது. அதிமுக என்ற இயக்கம் தலைவர், மக்களுக்காக ஆரம்பித்தது. திமுக போல் இல்லை. நல்ல ஆட்சி 2026ல் கொடுப்போம். அது மக்களாட்சியாக இருக்கும். 

வெளியில் சில பேர் நினைக்கலாம், அதிமுகவை சுக்கு நூறாக உடைத்துவிடலாம் என்று. அது எப்படி என்றால், கடலில் இருக்கு தண்ணீரை ஒரு பக்கெட்டில் எடுத்து வெளியேற்றிவிடுவேன் என்பது போலாகும். அதிமுக என்பது பொதுமக்கள் மற்றும் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி.

2026ல் எல்லோரும் ஒன்றிணைந்து நல்லபடியா ஆட்சி அமைத்து, அது தலைவர் அம்மா வழியில் மக்களுக்கு பிடித்த ஆட்சியாக இருக்கும். அனைவரும் ஒன்றினைய வாய்ப்பில்லை என்பதை ஒருவர் முடிவு செய்யும் விஷயம் இல்லை. அதிமுக சட்டதிட்ட விதிகள்படி, எங்கள் அடிமட்ட தொண்டர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் கட்சியின் சட்ட விதிப்படி நடக்கும். அதை நாங்கள் நல்லபடியா செய்வோம்” என்றார். 

எடப்பாடி மறுத்தாலும் டிசம்பருக்குள் அதிமுக ஒன்றிணையும்.! அடித்து கூறும் ஓபிஎஸ்
முன்னதாக தனியாக வந்து வைத்திலிங்கத்தை சந்தித்த டி.டி.வி.தினகரன், சசிகலாவை போல் அல்லாமல் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாகவே எச்சரிக்கை விடுத்தார்.

டி.டி.வி. தினகரன் அளித்த பேட்டியில், “பழனிச்சாமி இடம் உள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் தேர்தலுக்குப் பிறகு அதை மீட்டெடுக்கின்ற பொறுப்பு எங்களிடம் வரும். பழனிச்சாமிடம் இரட்டை இலை சின்னம் உள்ளதால் அம்மாவின் (ஜெயலலிதா) கட்சி பலவீனம் ஆகிவிட்டது. தேர்தலுக்கு பிறகு பழனிச்சாமி, அதிமுகவுக்கு மூடு விழா நடத்தி விடுவார். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று, தேசிய ஜனநாயக கூட்டணி அரசை அமைப்பார்கள்” என்றார்.

அடுத்தடுத்து டி.டி.வி, சசிகலா, திவாகரன் ஆகியோர் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது , அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடித்துள்ளதால் நிம்மதியின்றி தவிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, இவர்களின் சந்திப்பு மேலும் கலக்கத்தை தந்துள்ளது. அடுத்து வரும் நாட்கள் நிச்சயம் எடப்பாடிக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 

அதிமுகவை உடைக்க காத்திருக்கும் கொங்கு டீம்.? ஒற்றை ஆளாக தவிக்கும் எடப்பாடி- நடப்பது என்ன.?