பொங்கல் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கமா? சசிகலா ஆவேசம்…
பொங்கல் திருநாள், தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை நாளாக இருந்த நிலை மாற்றப்பட்டு, விருப்ப விடுமறையாக அறிவிக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை அளிப்பதாக, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் மத்திய அரசு உணர்ந்து ஏற்று, தமிழர்களின் பெருமைமிகு பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவுக்கு கட்டாய விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் மூத்த குடியான தமிழர்கள் பன்னெடுங்காலமாக கொண்டாடி மகிழும் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாள், தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை நாளாக இருந்த நிலை மாற்றப்பட்டு, விருப்ப விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் ஜாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கொண்டாடும் சிறப்பு வாய்ந்த விழா - இந்த விழாவை அனைவரும் குடும்பமாகக் கொண்டாடி மகிழ விடுமுறை அளிப்பது மத்திய அரசின் கடமை என்று தெரிவித்துள்ளார்-
தமிழர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் மத்திய அரசு உணர்ந்து ஏற்று, தமிழர்களின் பெருமை மிகு பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவுக்கு உடனடியாக கட்டாய விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்வதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
