கடும் சிறையில் சசிகலா… பழங்கள் உள்ளிட்ட பொருட்களைக் கூட கொடுக்க முடியாமல் திருப்பிக் கொண்டு வந்த வக்கீல்கள்….

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க தற்போது கடும் நெருக்கடி கொடுக்கப்படுவதால் வக்கீல்கள் கூட அவரை சந்திக்க முடியாமலும் கொண்டு சென்ற பொருட்களை சசிகலாவிடம் கொடுக்க முடியாமலும் திணறி வருகின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த பிரச்சனைக்குப் பிறகு சசிகலாவை சந்திப்பதில் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 20 ஆம் தேதி சசிகலாவை சந்திக்க சிறைக்கு சென்ற டி.டி.வி.தினகரன், அவரை சந்திக்க அனுமதி அளிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினார்,

இந்நிலையில் நேற்று சசிகலாவை சந்திக்க வக்கீல்கள் அசோகன், மூர்த்தி, மகேஷ் ஆகியோர், 3 மணிக்கு சிறைக்கு சென்றனர். அப்போது போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அளவுக்கு அதிகமாக 13 முறை சசிகலாவை பர்வையாளர்கள் சந்தித்தாகவும், அதனால் அவர்களை அனுமதிக்க முடியாது என்றும் போலீசார் அவர்களை தடுத்து  நிறுத்தினர்.

நீண்ட வாக்குவாதத்திற்குப் பின்னரே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சசிகலாவுக்காக அவர்கள் எடுத்துச் சென்ற புத்தகங்கள், பிஸ்கெட், பழங்கள் போன்றவற்றை அவர்கள் திரும்பவும் கொண்டு வந்தனர்.

சிறை அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கியதாக எழுந்த புகாரை அடுத்து சசிகலாவுக்கு சிறையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.