பெண்களைப் பற்றிய எண்ணத்தை மாற்ற வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தல்!
பெண்களுக்கு எதிரான அரசியல் அவதூறுகளால் மனம் உடைந்த சத்குரு ஜக்கி வாசுதேவ், பெண்களைப் பற்றிய எண்ணத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ், மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்டதில் இருந்து சீராக குணமடைந்து வருகிறார். இந்த நிலையில், எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டிய பிரசாரங்களில் பெண்களுக்கு எதிரான அரசியல் அவதூறுகளால் மனம் உடைந்த சத்குரு ஜக்கி வாசுதேவ், பெண்களைப் பற்றிய எண்ணத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பி வருபவர்களை சமூக வலைதளங்களில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து, சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தேர்தல் பிரசாரங்களில் பெண் தலைவர்கள் மீதான பாலியல் மற்றும் இழிவான கருத்துக்கள் அதிகரித்து வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“கடந்த இரண்டு வாரங்களாக, பெண்களுக்கு எதிரான கடுஞ்சொற்களை நான் கேட்கிறேன். யாரோ ஒருவர் "ரேட் கார்டு" பற்றிப் பேசுகிறார். மேலும் ஒருவர் 75 வயதுப் பெண்மணியைப் பற்றி கேவலமான விஷயங்களைச் சொல்கிறார். 60 வயதுக்கு மேற்பட்ட அரசியல்வாதியின் பெற்றோரைப் பற்றி வேறு யாரோ பேசுகிறார்கள். நீங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல, தயவு செய்து இவர்களை தடை செய்யுங்கள்.” என சத்குரு ஜக்கி வாசுதேவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபகாலமாக கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பல அரசியல் பிரமுகர்கள் பெண் தலைவர்களுக்கு எதிராக அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி வருவதற்கிடையே, மூளையில் செய்து கொண்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு சத்குரு பேசிய முதல் வீடியோவில் பெண்களைப் பற்றிய எண்ணத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“இந்த நாட்டில் உள்ள கதையை நீங்கள் மாற்றவில்லை என்றால், உங்களால் எதையும் மாற்ற முடியாது.” என சத்குரு தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் உட்பட அனைத்து தரப்பினரிடம் இருந்தும் இதற்கான நடவடிக்கை தேவை என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
“பெண்களைப் பற்றி கேவலமான விஷயங்களை பேசுபவர்களை ஊடக நிறுவனங்கள், சமூக வலைதளங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் என நீங்கள் யாராக இருந்தாலும், அவர்களைத் தடுக்க வேண்டும். அவர்களை நிரந்தரமாக புறக்கணிக்க வேண்டும் என நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.” என சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் வாக்குப்பதிவுக்கு தயாராகி வருவதாக், பொதுவெளியில் பிரசாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பெண்களை இழிவுபடுத்தும் கருத்துக்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இந்த பின்னணியில் சத்குரு ஜக்கி வாசுதேவின் வீடியோ பெண்களுக்கான முக்கியத்துவத்தை பற்றி பேசுவதுடன், அவர்கள் மீதான எண்ணத்தை மாற்ற வேண்டியதன் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது.
மூளை அறுவை சிகிச்சை செய்துகொண்டதிலிருந்து, சத்குரு ஜக்கி வாசுதேவ் சீராக குணமடைந்து வருவதாகவும், அவர் விரைவில் குணமடைய உலக மக்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருவதாகவும் ஈஷா அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.