அதிமுகவும் பாஜகவுடன் சேர்ந்திருப்பதால் தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக கூட்டணியில் சேர வேறு சாய்ஸ் இல்லாமல் காங்கிரசுக்கு இருந்து வந்தது. ஆனால் இப்போது நடிகர் விஜய்யின் தவெக லட்டு போல் வந்து சேர்ந்துள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சியான திமுகவும், காங்கிரசும் கைகோர்த்துள்ளன. இந்த கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. கூட்டணியில் பிரச்சனையின்றி தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. ஆனால் கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான காங்கிரஸ் தேர்தலில் கூடுதல் தொகுதிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

தவெகவுடன் செல்ல காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பம்

அதிமுகவும் பாஜகவுடன் சேர்ந்திருப்பதால் தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக கூட்டணியில் சேர வேறு சாய்ஸ் இல்லாமல் காங்கிரசுக்கு இருந்து வந்தது. ஆனால் இப்போது நடிகர் விஜய்யின் தவெக லட்டு போல் வந்து சேர்ந்துள்ளது. இதனால் தவெகவை வைத்து திமுகவை காங்கிரஸ் மிரட்டி வருகிறது. விஜய்யின் ஜனநாயகன் பட விவகாரத்தில் ஒருசேர அவருக்கு ஆதரவு தெரிவித்தனர் காங்கிரஸ் எம்.பி.க்கள். மேலும் ஆட்சி அதிகாரம் கேட்பது தொடர்பாக காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் மோதல் ஏற்பட தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் பலம் குறைந்து விட்டது

இந்த நிலையில், காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி சேர்ந்தால் மீண்டும் அதிகாரத்துக்கு வர முடியும் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு நீண்ட கால வரலாறும் பாரம்பரியமும் உண்டு. மற்ற கட்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்ததால், அக்கட்சியின் பலம் தற்போது குறைந்துவிட்டது. உங்களுக்குத் தேவையான அதிகாரத்தை நாங்கள் வழங்குகிறோம் என விஜய் முன்வந்துள்ளார்.

விஜய்யுடன் கை கோர்க்க வேண்டும்

ஆகவே காங்கிரஸ் கட்சி இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த அரிய வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஒரு புதிய வரலாற்றைப் படைக்க முடியும். காங்கிரஸ் மீண்டும் அதிகாரத்துக்கு வர வேண்டும். ஜனநாயகன் பட விவகாரத்திலும், கரூரில் நடந்த நிகழ்வுகளிலும் என்ன நடந்தது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகையால் வரவிருக்கும் தேர்தலில் விஜய்க்கான வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.