டி.டி.வி தினகரன் மீது பண மோசடி புகார் அளிக்குமாறு போலீசார் புல்லட் பரிமளத்தை நெருக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா இருந்த போது அ.தி.மு.க.வின் நிர்வாகிகளில் ஒருவராக காஞ்சிபுரத்தில் வலம் வந்தவர் புல்லட் பரிமளம். இவர் காஞ்சிபுரம் நகராட்சி கவுன்சிலராகவும் இருந்துள்ளார். ஜெயலலிதா இருந்த போதே பரிமளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். காரணம் கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே 222 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி என்று புல்லட் பரிமளம் காஞ்சிபுரம் முழுவதும் பிளக்ஸ் வைத்துவிட்டார்.

இந்த பிளக்ஸ் போர்டு விவகாரம் தேசிய அளவில் ஊடகங்களுக்கு செய்தியானது. இதனை தொடர்ந்து புல்லட் பரிமளத்தை கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. தற்போது அ.தி.மு.க இரண்டாக பிரிந்த நிலையில் தினகரன் அணியில் இருந்து தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார் பரிமளம். மேலும் தினகரனின் அ.ம.மு.க கட்சியில் பொறுப்பு பெறுவதற்காக கடுமையாக முயன்று வந்துள்ளார். மேலும் ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்காக இவர் கணிசமான தொகையை செலவழித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தினகரன் கட்சி நிகழ்ச்சிகளுக்கும் பரிமளம் செலவு செய்துள்ளார்.

மேலும் பொறுப்பு பெற்றுத் தருவதாக பரிமளத்திடம் இருந்து தினகரனுக்கு நெருக்கமானவர்கள் சிலர் பணம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் புல்லட் பரிமளம் தான் தினகரனுக்கு நெருக்கமானவர் என்று கூறி காஞ்சிபுரத்தில் வசூல் வேட்டை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் புல்லட் பரிமளத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக தினகரன் அறிவித்தார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த புல்லட் பரிமளம் கட்சிப் பொறுப்புக்கு பணம் பெற்றவர்களை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால் டி.டி.வி தினகரனை வாழ்த்தி அடித்த பேனர்களை எல்லாம் கொண்டு சென்று தினகரன் வீட்டு முன்பு கொளுத்திவிடலாம் என்று புல்லட் பரிமளம் சென்றுள்ளார். அப்போது தான் எதிர்பாராதவிதமாக காரில் இருந்த பெட்ரோல் கேன் வெடித்துள்ளது.

உண்மை இப்படி இருக்க தினகரன் தரப்போ, புல்லட் பரிமளம் தங்களை கொலை செய்யவந்ததாக புகார் அளித்துள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புல்லட் பரிமளத்தை வைத்து தினகரனுக்கு எதிராக காய் நகர்த்துகிறது போலீஸ். கட்சிப் பதவிக்கு பணம் கேட்டதாகவும், பணம் கொடுத்த பிறகும் பதவி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் தினகரன் மீது புகார் அளிக்க போலீஸ் புல்லட் பரிமளத்தை வலியுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.