Rs 7 lakhs fraud case against former MP and another one
விழுப்புரம்
அரசாங்க வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த முன்னாள் எம்.பி. உள்பட இருவர் மீது வழக்குப் பதிவு செய்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் மாவட்டம், எறையானூர் நேதாஜி நகர் 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் வடிவேலு மகன் ஜெயபாலன் (35). இவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சி முடித்துள்ளார்.
இவருக்கு திண்டிவனம் நல்லியகோடான் நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பழக்கமாகி ஜெயபாலனிடம் தனக்கு அரசியல் பிரமுகர்கள் சிலரை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆசைவார்த்தை காட்டியுள்ளனர்.
இதனை நம்பிய ஜெயபாலன், கண்ணனிடம் தனக்கு எப்படியாவது அரசு வேலை வாங்கி தரும்படி கூறியுள்ளார். அதற்கு பணம் செலவாகும் என்று கண்ணன் கூறினார். அதனைத் தொடர்ந்து ஜெயபாலனிடம் இருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.7 இலட்சத்தை பெற்றார்.
இந்தப் பணத்தை முன்னாள் எம்.பி.யான ரித்தீஷிடம் கண்ணன் கொடுத்துள்ளார். ஆனால், கண்ணனும், ரித்தீசும் ஜெயபாலனுக்கு அரசு வேலை வாங்கி கொடுக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். மேலும், இருவரிடமும் சென்று தன்னுடைய பணத்தை திருப்பித்தருமாறு ஜெயபாலன் கேட்டதற்கு பணத்தையும் திருப்பித் தராமல் மோசடியும் செய்துள்ளனர்.
இதுகுறித்து ஜெயபாலன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கண்ணன், ரித்தீஷ் ஆகிய இருவரின் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் வாசு மற்றும் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
