road rule violation action

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளின், 'லைசென்ஸ்' நீதிமன்ற உத்தரவுப்படி ரத்து செய்யப்படும் என, போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் விபத்துக்களும், உயிரிழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. சாலை பராமரிப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது விபத்துக்கு காரணங்கள் என்று கூறப்பட்டாலும், போக்குவரத்து விதிகளை மதிக்காததால் தான் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுகின்றன.



இதை கருதி, உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு கமிட்டி, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின், 'லைசென்ஸ்'களை தற்காலிகமாக ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் தீவிர சோதனையில் இறங்கியுள்ளனர். 

அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிக்னல்களை மதிக்காமல் செல்வது, மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வது, அதிக பாரம் ஏற்றி செல்வது போன்ற போக்குவரத்து விதிகளை மீறும் அனைவர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து, 'டிரைவிங் லைசென்ஸ்' ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.