காஞ்சிபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த சினிமா உதவி இயக்குனர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை வடபழனி குமரன் காலனி 6வது தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் கமல் (37). சினிமாவில் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று காலை கமல் சென்னையில் இருந்து தர்மபுரிக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள வெள்ளைகேட் என்ற இடத்தில் சென்றபோது, திடீரென கமலின் கட்டுப்பாட்டை இழந்த கார், தறிக்கெட்டு ஓடி, சாலையோரம் நின்றிருந்த லாரி, மீது கார் பயங்கரமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. கமல் காருக்குள் சிக்கிக்கொண்டார். அவரால் வெளியே வரமுடியவில்லை.
தகவலறிந்து காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று காருக்குள் சிக்கியிருந்த கமலை மீட்டனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவரை காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
