Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் இருந்து நெல் கொள்முதல் 85% சரிந்தது - மோடியின் ரூபாய் நோட்டு தடையால் பயங்கர அடி

rice cultivation drop down to 85 percentage
rice cultivation drop down to 85 percentage
Author
First Published Jun 11, 2017, 3:30 PM IST


தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சி, அதோடு பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை ஆகியவற்றால், 2016-17ம் ஆண்டு மாநிலத்தில் இருந்து நெல் கொள்முதல் செய்யும் அளவு 84.48 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என மத்திய வேளாண்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களில் கூறப்பட்டுள்ளதாவது-

கடந்த 2015-16ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் அளவு, 8.83 லட்சம் டன் ஆகும். ஆனால், மாநிலத்தில் கடந்த 2016-17ம் ஆண்டு நிலவிய கடும் வறட்சி, மோடியின் ரூபாய் நோட்டு தடை ஆகியவற்றால்,  நெல் கொள்முதல் 1.37 லட்சம் டன்னாக படுவீழ்ச்சி அடைந்துள்ளது. ஏறக்குறைய 85 சதவீதம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் சட்டீஸ்கர், பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் நெல் கொள்முதல் அளவு, 6.79 சதவீதம் உயர்ந்து, 324.81 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்களில் கடந்த 2015-16ம் ஆண்டு 304.15 லட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது.

கடந்த ஆண்டு வடகிழக்கு முழுமையாக பொய்த்தது, மற்றும் ரூபாய் நோட்டு தடையால் கடுமையான பணத்தட்டுப்பாடு ஆகிய காரணங்களால் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் கடுமையான இடர்பாடுகளையும், இன்னல்களையும் சந்தித்தனர். இதனால்,மாநிலத்தில் நெல் விளைச்சல் என்பது முற்றிலுமாக பாதித்தது.

தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் குறுகியகால பயிர்களையே அதாவது குறுவை சாகுபடியே செய்தனர். இதனால், நெல் விளைச்சல் போதுமான அளவு இல்லை. ஆனால், பிரதானமாக இருக்கும் சம்பா சாகுபடி வடகிழக்கு பருவமழையை நம்பி இருக்கும் நிலையில், அதுவும் பொய்த்ததால், நெல்விளைச்சல் முற்றிலும் முடங்கியது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மோடியால் அறிவிக்கப்பட்ட ரூபாய்நோட்டு தடைக்கு பின், விவசாயிகள் கையில் பணப்புழக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டதால், உரம், பூச்சிகொல்லி மருந்துகள், விதைநெல் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய பணம் இல்லை, அதோடு தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டதால், விவசாயமே பாதிக்கப்பட்டது.

இதில் அதிகபட்சமாக நாகப்பட்டிணம் மாவட்டம் வறட்சியால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் இருந்து நெல் 16ஆயிரத்து 235 டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த  2015-16ம்ஆண்டு 3.16 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஆண்டு வெறும் 16 ஆயிரம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.

இது குறித்து சென்னை மேம்பாட்டு கல்வி நிலைய பேராசிரியரும், நீர்மேலாண்மை நிபுனருமான எஸ். ஜனகராஜன் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டு டெல்டாபகுதியில் 14.5 லட்சம் ஏக்கர் நிலங்களில் நெல் விவசாயம் நடக்கும். ஆனால், கர்நாடக அரசு காவேரியில் இருந்து உரிய நேரத்துக்கு தண்ணீரை திறந்துவிடாதது, நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டது. விவசாயிகள் மோட்டார் வைத்து ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் இரைத்தும் தண்ணீர் கிடைக்காததால், விவசாயமே பாதிக்கப்பட்டது 

தமிழகத்தின் ஒட்டுமொத்த அரிசி உற்பத்தியில் டெல்டா பகுதியின் பங்கு மட்டும் 52 சதவீதமாகும். ஆனால், கடந்த ஆண்டு இதன் பங்கு 12 சதவீதமாக குறைந்துவிட்டு. இந்த ஆண்டு குறுவை சாகுபடியையும் ஏராளமான விவசாயிகள் கைவிட்டதால், ஏறக்குறைய 2,400 கோடி இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அடுத்து வரும் மாதங்களில் அரிசியின் விலையிலும் ஏற்றம் இருக்கும் ” என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios