காலனி என்ற சொல் ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் இருப்பதால் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காவல்துறை மானிய கோரிக்கையில் நேற்று பேசிய விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், காலனி என்ற சொல்லை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இன்று பதிலுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசிக உறுப்பினர் சிந்தனைச் செல்வன் அதேபோல் அவருடைய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோரி என்னிடம் கடிதத்தை அளித்திருக்கிறார்கள். நேரிலும் சொல்லியிருக்கிறார்கள். அந்த அடிப்படையிலே ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். பல்லாண்டு காலமாக தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வு முறையிலே தயாரிக்கப்பட்டு வந்த தரவரிசை பட்டியலானது சமூகநீதி அடிப்படையிலே இருந்து வந்த நிலையிலே கடந்த 2019ஆம் ஆண்டு வரப்பெற்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக இந்த முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும் அதற்கான சட்டரீதியான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும். அந்த குழு அளிக்கக்கூடிய பரிந்துரையின் அடிப்படையில் இந்த தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து ஒரு நல்ல தீர்வு காணப்படும் என்றும் தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: செப்டம்பர் 6 காவலர் நாள்! அதுமட்டுமல்ல! முதல்வர் ஸ்டாலினின் சூப்பர் அறிவிப்புகள் இதோ!
காலனி என்ற சொல்
மேலும் இன்னொரு முக்கிய அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். இந்த மண்ணின் ஆதி குடிகளை இழிப்படுத்தும் அடையாளமாக “காலனி” என்ற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசை சொல்லாக மாறியிருப்பதால் இனி இந்த சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 2024ம் ஆண்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு!

பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வேண்டிய நாள்
இதனைத் தொடர்ந்து பேசிய விசிக உறுப்பினர் சிந்தனை செல்வன்: காலனி என்ற சொல் நீக்க அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாள் சமூக நீதியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வேண்டிய நாள். இனி சமூக நீதி சமத்துவம், சகோரத்துவம் என்றால் மு.க.ஸ்டாலின் என்று காலம் சொல்லும் என தெரிவித்துள்ளார்.

முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி
அதேபோல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை காலனி என்ற பெயரை நீக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பிடல் காஸ்ட்ரோவின் க்யூபாவில் காலனியையும் ஊரையும் ஒன்றாக சேர்த்தார். காலனி என்ற பெயரை நீக்கிய அதே நேரத்தில் காலனி என்ற பெயருக்கு பதிலாக இலக்கியத்தில் உள்ள பெயரை வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
