கன்னியாகுமரி

ஓகி புயலில் காணாமல்போன மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கினார்.

கன்னியாகுமரியில் விபத்தில் உயிரிழந்த மீனவர் மற்றும் ஓகி புயலில் காணாமல்போன மீனவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே நேற்று வழங்கினார்.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், கொட்டில்பாடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர் பனியடிமை (36), இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தார். மீனவர் குழு விபத்து காப்புறுதித் திட்டத்தின் கீழ் அவரது மனைவி அனுசியா மலரிடம் ரூ.2 இலட்சத்துக்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார். 

மேலும், கடந்த நவம்பர் 30ஆம் தேதி ஓகி புயலில் காணாமல்போன, சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ரிசோலின் (41) உடல் மரபணு சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து அவரது மனைவி லிஜி ராணியிடம் ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.10 இலட்சத்துக்கான வைப்புத் தொகை பத்திரம் திரும்பப் பெறப்பட்டு, வட்டியுடன் கூடிய ரூ.10 இலட்சத்து 548-க்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.

அந்த நிகழ்வின்போது மீன்வளத்துறை உதவி இயக்குநர் த.நடராஜன், சின்னத்துறை பங்குத்தந்தை ஷபின் ஆகியோர் உடன் இருந்தனர்.