திருவண்ணாமலை

ஆரணியில் மோட்டார் சைக்கிள் மோதி பலியான விவசாயின் உடலை விபத்து ஏற்படுத்தியவரின் வீட்டு முன்பு வைத்து நிவாரணம் கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சித்தேரி புதிய காலனியைச் சேர்ந்த விவசாயி நடராஜன் (52). இவர் நேற்று முன்தினம் இரவு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நிலத்திற்குச் சென்றார். பின்னர் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

ஆரணி – சேத்துப்பட்டு சாலையில் சென்றபோது அதே கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது விக்னேஷ் ஓடடிவந்த மோட்டார் சைக்கிள் நடராஜன் மீது மோதியதில் நடராஜன் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோத்த மருத்துவர்கள் நடராஜன் வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

இதனால் சினம் கொண்ட உறவினர்கள், நடராஜனின் உடலைத் தூக்கிச் சென்று விபத்துக்கு காரணமான விக்னேஷ் வீட்டின் முன்பு வைத்து நடராஜன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவலறிந்ததும் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெரினாபேகம், தாலுகா காவல் ஆய்வாளர் சாலமோன்ராஜா, உதவி ஆய்வாளர் சங்கர், ஆரணி தாசில்தார் சுப்பிரமணி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விக்னேஷ் குடும்பத்தினரிடமிருந்து, நடராஜன் குடும்பத்திற்கு ரூ.1 இலட்சம் வழங்குவதாக கூறி உடனடியாக ரூ.20 ஆயிரத்தை வழங்கினர். அதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னர் நடராஜனின் உடலை உடற்கூராய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆரணி தாலுகா காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.