Asianet News TamilAsianet News Tamil

நிராகரிக்க நீங்கள் யார்? எங்கள் வாகனம் தமிழகம் முழுவதும் பயணிக்கும்... முந்தியடிக்கும் மு.க.ஸ்டாலின்!!

டெல்லி குடியரசு தினவிழாவில் நிராகரிக்கப்பட்ட ஊர்தி தமிழகத்தில் காட்சிப் படுத்தப்படும்  என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

rejected decorative vehicle will be displayed in tamilnadu said cm stalin
Author
Tamilnadu, First Published Jan 18, 2022, 8:17 PM IST

டெல்லி குடியரசு தினவிழாவில் நிராகரிக்கப்பட்ட ஊர்தி தமிழகத்தில் காட்சிப் படுத்தப்படும்  என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடியரசுத் தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பு நடக்கும். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் நடைபெறும். மாநிலங்களின் கலாச்சாரங்களை பறைசாற்றும் விதமாக பல தீம்களில் இந்த ஊர்தி அணிவகுப்பு நடக்கும். தமிழ்நாடு சார்பாக கடந்த 3 வருடமாக அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த வருடம் தமிழ்நாடு சார்பாக வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை மையமாக வைத்து அலங்கார ஊர்தி உருவாக்கப்பட்ட நிலையில் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது பெரிய அளவில் சர்ச்சையானது. இந்த நிலையில் குடியரசுத் தின ஊர்வதில் தமிழ்நாட்டின் அலங்கார வாகனம் புறக்கணிக்கப்பட்டது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை பறைசாற்றும் இந்த அலங்கார ஊர்திக்கு முறையான அனுமதி வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்து இருந்தார். ஆனால் இன்று மத்திய அரசு அளித்த விளக்கத்தில் தமிழ்நாடு அனுப்பிய அலங்கார ஊர்தி ஏற்றுக்கொள்ளப்படாது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.

rejected decorative vehicle will be displayed in tamilnadu said cm stalin

இந்த நிலையில் டெல்லி குடியரசு தினவிழாவில் நிராகரிக்கப்பட்ட ஊர்தி தமிழகத்தில் காட்சிப்படுத்தப்படும்  என்று முதலஅமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தின அலங்கார அணி வகுப்பில் மாநிலங்கள் சார்பாகவும், மத்திய அரசின் துறைகள் சார்பாகவும் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பானது. இந்த ஆண்டு இந்தியா 75 என்ற தலைப்பின் கீழ் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் இடம்பெற வேண்டி விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் பறை சாற்றுகின்ற வகையில், அலங்கார ஊர்திக்காண வடிவமைப்பு மாதிரிகள் மத்திய அரசின் தேர்வுக் குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு, மூன்று முறை அவர்கள் கூறிய திருத்தங்களைச் செய்தோம். நான்காவது கூட்டத்திற்கு எந்தவொரு காரணமுமின்றி அழைக்காமல், அது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் இருந்துவிட்டு, தற்போது நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்த வருத்தத்தை நேற்று பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். இன்று கிடைக்கப்பெற்ற ஒன்றியப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் கடிதத்தில் எந்தவிதக் காரணங்களையும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் சற்றும் சளைக்காத வகையில், விடுதலைப்போரில் தமிழகம் செய்த இருநூற்றி ஐம்பது ஆண்டுகலத் தொடர் பங்களிப்பு சுதந்திரப் பேராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதாகும். முதல் இந்திய சுதத்திரப் போர் என போற்றப்படும் சிப்பாய் புரட்சிக்கு (1857) அரை நூற்றாண்டுக்கு முன்பே நடந்தேறிய வேலூர் புரட்சி ஆங்கிலேய வல்லாதிக்க எதிர்ப்பு வரலாற்றில் முக்கிய தொடக்கமாகும். அதேபோல், ஜான்சிராணின் வாள் வீசுவதற்கு முக்கால் நூற்றண்டுக்கு முன்பே. ஆங்கிலேயர்களைத் தீவிரமாக எதிர்த்துப் போரிட்டு, தான் இழந்த நாட்டை வென்ற ஒரே ராணி என்ற புகழைப் பெற்றவர் வீரத்தாய் வேலுநாச்சியார்.

rejected decorative vehicle will be displayed in tamilnadu said cm stalin

ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராகப் பலமுறை போரிட்ட பூலித்தேவன் ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிரான போரில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம். மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை உள்ளிட்ட எண்ணிலடங்கா வீரத்திருமகன்களை விடுதலைத் தியாகத்திற்கு தந்த மண் தமிழ்நாடாகும்.  ஆங்கிலேயர்களின் வணிகத்திற்குப் போட்டியாக சுதேசி கப்பல் கம்பெனி எனும் பெரும் கனவை நெஞ்சில் ஏந்தி, தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இழந்து, ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராகச் செயல்பட்டு இரட்டைத் தீவாந்திர தண்டனை பெற்றவர் வ.உசிதம்பரனார். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தனது வீரமிக்க கவிதைகளால் விடுதலை வேள்வி செய்தவர் பாரதியார். இத்தகைய விடுதலைப் போராட்டத் தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூரும் விதமாகத்தான் நமது அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டுப்பற்றிலும் விடுதலை வேட்கையிலும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மாநில அரசின் சர்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும். மேலும். சம்பத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்படக் கண்காட்சியை நாட்டின் பிற முக்கிய நகரங்களில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios