சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.17 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இது தொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் வெளிநாட்டு கரன்சி (ஹவாலா பணம்) கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று அதிலையில் அதிகாரிகள், சென்னை விமான நிலையத்துக்கு சென்றனர். அங்கு சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணம் செய்யய இருந்தவர்களை ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது சென்னை பெரம்பூரை சேர்ந்த சாகுல்அமீது (35) என்பவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணியாக செல்ல இருந்தார். சந்தேகத்தின் பேரில் அவரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர். ஆனால் அவர், முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகம் வலுத்தது.
இதையடுத்து,சாகுல்அமீதிடம் இருந்த பையை திறந்து சோதனை செய்தபோது, அதில் கருப்பு நிற பார்சலில் கட்டுக்கட்டாக அமெரிக்க மற்றும் யூரோ கரன்சிகள் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பு உள்ள வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர், சாகுல்அமீது விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றிய பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே அது ஹவாலா பணமாக இருக்குமோ? என அதிகாரிகள் சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைதான சாகுல்அமீதுவை சென்னையில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அந்த பணத்தை சிங்கப்பூருக்கு கடத்திச்செல்லும்படி அவரிடம் கொடுத்து அனுப்பியவர்கள் யார்? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
