Asianet News TamilAsianet News Tamil

பச்சை பொய்களை சாதனையாக கூறும் தமிழக அரசு: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

மூன்று ஆண்டுகளில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் உருவாகிவிட்டது என்று பச்சை பொய்களை சாதனையாக அரசு செய்தி குறிப்பில் கூறுவதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்

RB udhayakumar alleges TN Govt is saying lies as their success smp
Author
First Published May 16, 2024, 4:50 PM IST

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக  சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசு வெளியிட்டுள்ள பிரதானமாக செய்தி குறிப்பில் சொல்லாத புதிய திட்டங்களை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்  நிறைவேற்றியதால் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்திருகிறது. இந்த செய்தி குறிப்பை பார்த்து மக்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். களநிலவரத்தை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அறியவில்லையோ என்று உண்மை உரைக்கவில்லையோ என்று தான் நமக்கு கவலையாக இருக்கிறது. மூன்று ஆண்டுகளில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் உருவாகிவிட்டது என்று பச்சை பொய்களை சாதனையாக அரசு செய்தி குறிப்பில் சொல்லலாமா?” என கேள்வி எழுப்பினார்.

“கனவிலும் கூட நிறைவேற்ற முடியாத 520 பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்காளர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுகவிற்கு, வாக்குறுதிகளை அள்ளி வீசுவது அவர்களுக்கு கைவந்த கலை, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு ஏக்கர் நிலம் தருவோம்  என்று சொன்ன அந்த தேர்தல் வாக்குறுதி எப்படி திமுக அரசால் கைவிடப்பட்டது கானல் நீரானது, கிணத்திலே போட்ட கல்லானது என்பது நாம் அறிந்த வரலாறு.” என ஆர்.பி.உதயகுமார் சாடினார்.

தொடர்ந்து பேசிய ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: “கருணாநிதி வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை இன்றைக்கு இளைய தலைமுறைக்கு பாடமாக வைத்திருப்பதை பார்க்கிற போது இந்த கொடுமையை நாம் எங்கே போய் சொல்லுவது. இதை கேட்பதற்கு நாதி இல்லையா என்று மக்கள் இன்றைக்கு வேதனைப்படுகின்றார்கள்.

98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக திரும்பத் திரும்ப ஒரு பொய்யை சொல்லுகிற போது அது உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தை தான் அவர்கள் நம்பி இருக்கிறார்களே தவிர மக்களை நம்பியதாக தெரியவில்லை. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று சொன்ன நீங்கள் தற்போது பாட்டிற்கு பத்து ரூபாய் கமிஷன் என்று சொன்னவுடன் மதுவிலக்கே அரவே மறந்து போனீர்கள்.

அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் என்று கூறி, அதன்பின் தகுதி உள்ள பெண்களுக்கு என்று மாற்றி அதிலும் பாதி பேருக்கு கிடைக்காத நிலை தான் தற்போது உள்ளது, அந்த உண்மை நிலவரத்தை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார்  எடுத்து வைத்தால் அந்த கசப்பான உண்மையை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதற்கு எதிர் வாதம் செய்கிறீர்களே தவிர அந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு நீங்கள் முன்வரவில்லை.

 உங்கள் மகனும், மருமகனும் ஒரே வருஷத்திலே ரூ.30,000 கோடியை சேர்த்து விட்டார்கள் என்று சொல்லி உங்களுடைய அமைச்சரவையில் இருந்த ஒரு அமைச்சர் வீடியோ வெளியாகிறபோது அதை துடித்து எழுந்து மறுத்து இருக்க வேண்டாமா? அவரை நீக்குவதைப் போல நீக்கி அதற்காக எந்த மறுப்பு தெரிவிக்காமல் அதற்கான பதிலும் சொல்லாமல் விளக்கம் சொல்லாமல் இன்றைக்கு அந்த 30 ஆயிரம் கோடி என்னானது  அதற்கான விடை தெரியவில்லை?” என கேள்வி எழுப்பினார்.

அது எல்லாம் பொய் என்று நீங்கள் மறுத்திருந்தால் தற்காலிகமாகாது இந்த மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கக் கூடிய ஒரு வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும் என அவர் கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது: “ஒரு சொட்டு தண்ணீர் கூட சென்னையில் தேங்காது என்று உங்கள் அமைச்சர் ஒருவர் சொன்னதை நம்பி மக்கள் வெளியே வருகிற போது  மக்கள் பாதிக்கப்பட்டார்கள் சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு வெள்ளகாடாக மாறிய காட்சி ஏற்பட்டது. அமைச்சர்கள் மழைநீர் வடிகால் பணிகளுக்கு 4,000 கோடி செலவிடப்பட்டது என்று சொல்லுகிறார்கள். 2000 கோடி இல்லை இல்லை 4000 கோடி என்று உளறினார்கள் உங்கள் அமைச்சருக்கே குழப்பம் எவ்வளவு கோடி  இதிலே கமிஷனாக வாங்கி இருக்கிறோம் என்று ஒரு குழப்ப நிலையை பார்க்கிறோம்.

Lok Sabha Election 2024 வாரணாசி பாஜக வேட்பாளர் பிரதமர் மோடி சொத்து மதிப்பு என்ன?

சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னனாக திமுக கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள் என்கிற  செய்தியால் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் தமிழகம் எழுந்திருக்கவில்லை என்பதை உங்களால் உணர முடிகிறதா? இன்றைக்கும் நம்முடைய மானம் கப்பலேறி கடல் கடந்து அமெரிக்காவிலே பறிபோய் ஆஸ்திரேலியா உறுதி செய்து தமிழகத்திற்கு இன்றைக்கு உலக சந்தை வேண்டும் என்று இளைய சமுதாய எதிர்பார்த்து இருக்கிறபோது  அந்த உலக சந்தையில் ஆற்றல் சார்ந்த மனித வளத்தை உலக சந்தையிலே முன்னிலைப்படுத்துவதற்கு பதிலாக உங்கள் கட்சிக்காரர்கள் மூலம்  சர்வதேச அளவிலே போதை பொருள்சந்தையாக மாறி  இந்திய தேசத்திற்கு தலைகுனிவை ஏற்பட்டுள்ளது இதுவரை 90 லட்சம் பேர் படிப்பை முடித்து வேலைவாய்ப்பில் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் உலக முதலீட்டாளர் மாநாட்டை நீங்கள் நடத்தி எத்தனை வேலை வாய்ப்புகள் நீங்கள் பெற்றுத் தந்திருக்கிறீர்கள்.

இந்தியாவிலேயே தமிழகம் இன்றைக்கு கடன் வாங்குவதிலே முதலிடத்தில் உள்ளது. நாங்கள் சொல்லாதை  சொன்னோம் என்று கூறினீர்கள். மின்சார கட்டணத்தை ஏற்ற மாட்டோம் என்று சொன்னீர்கள் கட்டணத்தை ஏற்றி விட்டீர்கள். சொத்து வரியை உயர்த்த மாட்டோம் கொரோனா காலத்திலேயே மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாய் இருக்கிறது என்று சொன்னீர்கள் தற்போது சொத்து வரி உயர்த்தி விட்டீர்கள்.

எங்கே தமிழகம் தன்னிறைவு பெற்றிருக்கிறது கொலை, கொள்ளை, கற்பழிப்பு நாட்களே இல்லை.போக்சோ வழக்குகள் அதிகமாக தமிழகத்திலே இன்றைக்கு நடக்கிறது.  இன்றைக்கு மது, மாது, சூது நிறைந்த நாடாக மாறியுள்ளது. இன்றைக்கு  போதையால் தமிழ்நாடு இளைய சமுதாயம் சீரழிந்து வருவதை பார்த்து நம்முடைய கண்களிலே கண்ணீர் வருவது மட்டுமல்ல, இதயத்தில் ரத்தம் வருகிறது.

எதையுமே நீங்கள் உள்வாங்காமல், உணராமல், தெரிந்து கொள்ளாமல், அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ள முயற்சி கூட எடுக்காமல் இன்றைக்கு தமிழகம் தன்னிறைவு பெற்றிருக்கிறது முதன்மை மாநிலம் திகழ்கிறது என்று பெருமிதம் கொள்கிற செய்தி குறிப்பு வெளியிட்டிருக்கிறீர்களே? உங்களுக்கு உண்மையிலேயே மக்களோடு தொடர்பு இருக்கிறதா? மக்களோடு நீங்கள் தொடர்பில் இருக்கிறீர்களா அல்லது நீங்கள் மக்களுக்கு தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறீர்களா?

மக்களுடைய தொடர்பு நீங்கள் இன்றைக்கு அருந்து போனதாக தான் தெரியும் ஏனென்றால் உண்மையை நிலவரம் இன்றைக்கு கலவரமாக இருக்கிறது அது குறித்து நீங்கள் எந்த சிந்தனையும் செய்ததாக நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. 

நீட் தேர்வு ரகசியம் கேட்டதுக்காக  மானம் இருக்கிறதா ரோஷம் இருக்கிறதா வெட்கம் இருக்கிறதா என்று எங்களை கேட்ட உதயநிதி ஸ்டாலின் அவர்களே? இன்றைக்கு இத்தனை நிலவரங்கள் கலவரமாக இருக்கிறபோது தமிழகம்  முதன்மையை மாநிலமாக திகழ்கிறது என்று செய்தி குறிப்பு வெளியிடுகிற உங்களுக்கு மானம் இருக்கிறதா ?ரோஷம் இருக்கிறதா ?வெட்கம் இருக்கிறதா? யோக்கிதை இருக்கிறதா என்று தமிழ்நாட்டு மக்கள் உங்களை கையை நீட்டி கோபத்தோடு கேட்கிறார்கள்.

உங்கள் காதுகளுக்கு எதுவும் எட்டவில்லை என்று  சொன்னால் காலம் கனியும் அப்போது எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் ஆட்சி மலரும், இந்த பிரச்சனைக்கு எல்லாம் தீர்வு காண்பார்.” இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios