இராமநாதபுரம்:

ரேசன் பொருள்கள் வழங்குவதில் முறைகேடுகளில் ஈடுபட்டால் மாவட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவியுங்கள், ரேசன் விற்பனையாளர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கிறேன் என்று ஆட்சியர் நடராஜன் தெரிவித்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல ரேசன் கடைகளில் பணி நேரத்தில் (காலை 9 முதல் மதியம் 1 மணி, மாலை 2 முதல் 6 மணி வரை) கடைகளை திறப்பதில்லை.

ரேசன் பொருள்களை அட்டைதாரர்களுக்கு முறையாக வழங்குவதில்லை. மாறாக போலி பில் போட்டு முறைகேடு செய்கின்றனர்.

எடை குறைவாக வழங்குகின்றனர் உள்ளிட்ட மோசடிகளில் பலர் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததால், ஆட்சியர் நடராஜன் உத்தரவின் பேரில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ஹேமா சலோமி, துணை பதிவாளர் (பொது விநியோகம்) பத்மக்குமார் தலைமையில் அதிகாரிகள் ரேசன் கடைகளில் முன்னறிவிப்பு இன்றி ஆய்வு நடத்தினர்.

இதில் முறைகேடுகள் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காருகுடி கூட்டுறவு ரேசன் கடை விற்பனையாளர் தமிழ்ச்செல்வி, நயினார்கோவில் ரேஷன் கடை விற்பனையாளர் அண்ணாமலை, எஸ்.காவனுார் கடை விற்பனையாளர் கவிதாராணி, கமுதி அருகே இராமசாமிப்பட்டி ரேசன் கடை விற்பனையாளர் அம்சவள்ளி ஆகிய நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 50 ஆயிரத்து 350 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என ஆட்சியர் நடராஜன் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், பொதுமக்கள் ரேசன் குறைகள் குறித்த புகார்களை மாவட்ட வழங்கல் அலுவலரிடம் 94450 00362 என்ற அலைபேசியிலும், 04567-230056 என்ற தொலைபேசியிலும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

73387 21604 என்ற அலைபேசி எண் மற்றும் 04567-230950 என்ற தொலைபேசியில் துணை பதிவாளரிடம் (பொது விநியோகம்) புகார் தெரிவிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கிறேன் என்று ஆட்சியர் நடராஜன் தெரிவித்தார்.