ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேன்டீன்.. கண்ணாடி பெட்டிக்குள் பஜ்ஜியை ருசிபார்த்த எலி - அதிர்ச்சியில் நோயாளிகள்!
Chennai Stanley GH : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேன்டீனில், தின்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டிக்குள் எலிகள் நடமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
சென்னையில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வடசென்னையில் உள்ளது தான் ஸ்டான்லி அரசு மருத்துவமனை. இங்கு சென்னைவாசிகள் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் கூட சிகிச்சைக்காக இங்கு வந்து செல்வது வழக்கம். சென்னையை பொருத்தவரை மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் ஒரு அரசு மருத்துவமனையாகவும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை திகழ்ந்து வருகிறது.
பெருந்துற்று காலத்தில் இந்த மருத்துவமனை சேவைகள் ரீதியாகவும், உள்கட்டமைப்பு ரீதியாகவும் மக்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பை பெற்றது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மக்கள் மத்தியில் புகழ்பெற்றிருக்கும் இந்த அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கேண்டில் கண்ணாடி பெட்டிக்குள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வடை, பஜ்ஜி போன்ற தின்பண்டங்களை எலிகள் ருசித்து கொண்டு இருந்த காட்சி வீடியோவாக வெளியாகி உள்ளது.
தீபாவளியை மது அருந்தி கொண்டாடிய நண்பர்கள்; வாக்குவாதத்தில் நண்பனை போட்டு தள்ளிய சக நண்பன் கைது
அந்த வீடியோ தற்பொழுது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு வந்த ஒருவர் இதனை வீடியோ எடுத்த நிலையில், அது சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் பலர் கேண்டீன் நடத்துபவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எலிகள் வந்து தின்பண்டங்களை உண்ணும் அளவிற்கு ஏன் இவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கிறீர்கள், இந்த தின்பண்டங்கள் விற்பனைக்கு உள்ளதா? என்று பொதுமக்கள் கேண்டீன் நடத்துபவர்களிடம் கேட்ட பொழுது, இந்த தின்பண்டங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது அல்ல என்று கூறி, அதன் பிறகு அங்கிருந்து தின்பண்டங்கள் அனைத்தையும் ஒரு பையில் எடுத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தீபாவளிக்கு 2 நாட்களில் 467 கோடிக்கு கல்லா கட்டிய டாஸ்மாக்
இந்நிலையில் உடனடியாக இந்த தகவல் மருத்துவமனையின் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், உடனே அந்த கேண்டினை மூட சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த மோசமான நிகழ்வுகளுக்கு யார் காரணம் என்பது குறித்து உடனடியாக விசாரிக்கவும் அவர் கூறியுள்ளார்.