Coimbatore Mayor: சிறையில் இருந்தே ஸ்கெட்ச் போட்ட செந்தில் பாலாஜி.! போட்டியின்றி கோவை மேயராக தேர்வான ரங்கநாயகி
கோவை மாநகர மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்த நிலையில் புதிய மாநகராட்சி மேயராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற தேர்தலில் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
கோவை மேயருக்கு எதிராக போர்க்கொடி
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் அனைத்து இடங்களையும் திமுக கைப்பற்றியது. இதனையடுத்து கோவை மாநகர மேயராக கல்பனா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஆரம்பம் முதலே கவுன்சிலர்களுக்கும் மேயருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் மேயரும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இந்தநிலையில் திமுக கவுன்சலர்களிடம் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் திமுக தலைமை அதிரடியாக முடிவெடுத்து கோவை மேயரை ராஜினாமா செய்ய உத்தரவிட்டது. கோவை மேயர் கல்பனாவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கோவை மேயர் தேர்தல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
மேயர் வேட்பாளர் ரங்கநாயகி
திமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. அதன் படி நேற்று வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது. கோவையில் கவுன்சிலர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் 29வது வார்டு உறுப்பினர் ரங்கநாயகி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ஒரு சில மூத்த கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்தனர் குறிப்பாக மீனா லோகு தனது பெயர் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்படும் என எதிர்பார்த்தார். ஆனால் ரங்கநாயகி பெயர் அறிவிக்கப்பட்டதால் கண்ணீர் மல்க கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து இன்று காலை மேயர் தேர்தல் நடைபெற்றது. முன்னதாக திமுக கவுன்சிலர்களை தனியார் திருணம மண்டபத்தில் வைத்து அறிவுரைகளை அமைச்சர் கேஎன் நேரு மற்றும் முத்துசாமி வழங்கினர்.
போட்டியின்றி மேயராக தேர்வு
இதனையடுத்து மாநகராட்சி அரங்கில் மேயர் தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பாக ரங்கநாயகி மட்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத காரணத்தால் போட்டியின்றி மேயராக தேர்வானார். அவருக்கு மாநகராட்சி ஆணையர் மற்றும் சக கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்தநிலையில் கோவையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் தற்போதைய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ரங்கநாயகியை தேர்வு செய்ததாக திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.