ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை மட்டுமே காவிரியில் தண்ணீர் திறக்க முடியும்..! குறுவை கருகும் ஆபத்து.! - அலறும் ராமதாஸ்
ஆகஸ்ட் 10-ஆம் நாளுக்குப் பிறகும் காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் குறுவை பயிர்களைக் காப்பாற்ற முடியாது; அவை கருகிவிடும் ஆபத்துள்ளது. அத்தகைய நிலை ஏற்பட்டால் காவிரிப் பாசன மாவட்டங்களில் நினைத்துப் பார்க்க முடியாது பாதிப்புகள் ஏற்படலாம் என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி மிகவும் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த மூன்று வாரங்களுக்கு விடுவதற்குத் தேவையான தண்ணீர் கூட மேட்டூர் அணையில் இல்லை என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு தருவதற்கு தேவையான தண்ணீர் கருநாடக மாநில அணைகளில் இருந்தாலும், அதை திறந்து விட அம்மாநில அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை வழங்க கர்நாடக அரசு மறுப்பதைக் கண்டித்து கடந்த 9-ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
கர்நாடக தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கவில்லை
அதன்பின் 11 நாட்களாகிவிட்ட நிலையில், கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர்மட்டம் அதிகரித்திருக்கும் போதிலும் கூட, அந்த நீரை தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடக அரசுக்கு மனம் வரவில்லை. கடந்த இரு வாரங்களில் கர்நாடக அணைகளுக்கு 17 டி.எம்.சிக்கும் கூடுதலான தண்ணீர் வந்துள்ள நிலையில், தமிழகத்திற்கு அரை டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது. அதுவும் கூட, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையிலிருந்து கிடைத்த தண்ணீர் தானே தவிர, கர்நாடக அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அல்ல. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், இன்று (ஜூலை 20)வரை காவிரியில் தமிழ்நாட்டிற்கு 31.12 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் சுமார் 10% அளவுக்கு 3.72 டி.எம்.சி தண்ணீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியிருக்கிறது.
இன்று வரை 27.40 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு நிலுவையில் வைத்திருக்கிறது. இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் ஆகும். காவிரி பாசனப் பகுதிகளின் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின் ஒரு மாதமும், ஒரு வாரமும் நிறைவடைந்துள்ள நிலையில், காவிரி படுகையில் குறுவை நடவுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டிருந்தால், நடப்பாண்டிலும் குறுவை சாகுபடி வெற்றியாக அமைந்திருக்கும். ஆனால், கர்நாடகம் தண்ணீரை திறந்து விடாததால் காவிரி பாசன மாவட்டங்களில் நடவு செய்யப்பட்ட குறுவை பயிர்களை காப்பாற்ற முடியுமா? என உழவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
ஆகஸ்ட் 10 வரை மட்டுமே தண்ணீர் திறக்க முடியும்
மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 71 அடி, அதாவது 34.40 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. அதில் குடிநீர் தேவை, குறைந்தபட்ச நீர் இருப்பு ஆகியவை போக 22 டி.எம்.சி தண்ணீரை மட்டுமே பாசனத்திற்காக திறந்து விட முடியும். ஒரு நாளைக்கு ஒரு டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படுவதாக வைத்துக் கொண்டால், அடுத்த 22 நாட்களுக்கு, அதாவது ஆகஸ்ட் 10-ஆம் நாள் வரை மட்டுமே காவிரியில் தண்ணீர் திறக்க இயலும். அந்த காலத்தில் குறுவைப் பயிர்கள் கதிர் கூட வைத்திருக்காது. ஆகஸ்ட் 10-ஆம் நாளுக்குப் பிறகும் காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் குறுவை பயிர்களைக் காப்பாற்ற முடியாது; அவை கருகிவிடும் ஆபத்துள்ளது. அத்தகைய நிலை ஏற்பட்டால் காவிரிப் பாசன மாவட்டங்களில் நினைத்துப் பார்க்க முடியாது பாதிப்புகள் ஏற்படலாம். அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
காவிரி பாசன மாவட்டங்களில் நிகழவிருக்கும் பேரிடர் தடுக்க இயலாதது அல்ல. அதற்கான தேவை கர்நாடக அரசு மனசாட்சியுடன் நடந்து கொள்வதும், மத்திய அரசு மனம் வைப்பதும் தான். காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடகம் இப்போது வரை வழங்க வேண்டிய தண்ணீர் 27.40 டி.எம்.சி மட்டுமே. ஆனால், கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்படுள்ள அணைகளில் இன்று காலை நிலவரப்படி 51 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குறுவையை காக்க இது போதுமானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்