பாமவின் தலைவர் அன்புமணி தான் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக ராமதாஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் பொதுக்குழு கூட்டம் நடத்திய இருவரும் பாமக தங்களுக்கே சொந்தம் எனக்கூறி தேர்தல் ஆணையத்தில் தங்கள் தரப்பு ஆதாரங்களை சமர்ப்பித்து இருந்தனர்.
பாமகவுக்கு அன்புமணியே தலைவர்
இரு தரப்பின் ஆதாரங்களையும் சரிபார்த்த தேர்தல் ஆணையம் அன்புமணி தரப்புக்கே பாமக சொந்தம் என்றும் அவரே பாமகவின் தலைவர் என்று அதிரடியாக அறிவித்தது. மேலும் இது தொடர்பாக ராமதாஸ்க்கு கடிதம் அனுப்பிய தேர்தல் ஆணையம், ''2026ம் ஆன்டு ஆகஸ்ட் 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர். பாமக நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். அதற்கான தரவுகள் உள்ளன'' என்று கூறியிருந்தது.
தேர்தல் ஆணையம் ஜனநாயகப் படுகொலை
தேர்தல் ஆணையத்தின் முடிவால் அன்புமணி ஆதரவாளர்கள் குஷியடைந்தனர். அதே வேளையில் ராமதாஸ் ஆதரவாளர்கள் கொதிப்படைந்தனர். ''தேர்தல் ஆணையம் ஜனநாயகப் படுகொலை செய்துள்ளது. ஆதாரங்களை ஆராயாமல் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையமும், அன்புமணியும் சேர்ந்து ராமதாசை ஏமாற்றி விட்டனர். அன்புமணியை ஜெயிலில் அடைக்க வேண்டும்'' என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து இருந்தனர்.
அன்புமணி கொடுத்தது பொய்யான ஆதாரம்
தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ராமதாஸ் வழக்கு தொடர்வார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக மருத்துவர் ராமதாஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ''பாமக தொடர்பாக நாங்கள் சமர்ப்பித்த ஆதாரங்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அன்புமணி கொடுத்த பொய்யான ஆதாரங்களை வைத்து அவரே தலைவர் என தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக முடிவு செய்துள்ளது'' என்று ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் 4ம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.


