பயிர் கடனுக்காக பிரீமியம் செலுத்தியது ரூ.9484.... ஆனால் இழப்பீடோ வெறும் ரூ.10- சீறும் ராமதாஸ்
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு சம்பா ஏக்கருக்கு ரூ.9484 காப்பீடாக வசூலிக்கப்படும் நிலையில், பலருக்கு வெறும் ரூ.10.41 மட்டும் தான் இழப்பீடாக வழங்கப் பட்டிருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள் பகல் கொள்ளையர்களாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பயிர் காப்பீடு- விவசாயிகள் ஏமாற்றம்
பயிர் காப்பீடு உரிய வகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 2022-23ஆம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, பயிர்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பல இடங்களில் உழவர்களுக்கு வெறும் ரூ.10.41 மட்டும் தான் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. காவிரி பாசன மாவட்டங்களில் தொடங்கி, கடலூர், விழுப்புரம், மேற்கு மாவட்டங்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வரை அனைத்து மாவட்டங்களிலும் இதே அளவில் தான் இழப்பீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த இழப்பீடு உழவர்களால் செலுத்தப்பட்ட காப்பீட்டு பிரிமியத் தொகையை விட மிகவும் குறைவு ஆகும்.
50 முதல் 100 ரூபாய் வரை மட்டுமே இழப்பீடு
நடப்பாண்டில் தான் உழவர்களுக்கு மிகக்குறைந்த தொகை காப்பீடாக வழங்கப்படுகிறது என்று கூற முடியாது. 2021-22ஆம் ஆண்டிலும் சம்பா பருவத்தில் பாதிக்கப்பட்ட உழவர்களில் 90 விழுக்காட்டினருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. மீதமுள்ள 10 விழுக்காட்டினரில் கூட பெரும்பான்மையினருக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை மட்டும் தான் இழப்பீடு வழங்கப்பட்டது.
இயற்கை சீற்றத்தால் பயிர்கள் பாதிக்கப்படும் போது, அதனால் உழவர்களுக்கு ஏற்படும் இழப்பில் ஒரு பகுதியையாவது ஈடு செய்ய வேண்டும் என்பதற்காகவே பயிர்க்காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், காப்பீட்டுக்காக செலுத்தப்படும் தொகை கூட உழவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்படுவதில்லை என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும்.
பயிர் காப்பீடு வழங்காத நிறுவனங்கள்
ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.9,484 காப்பீடாக செலுத்தப்படுகிறது. பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை விட மும்மடங்கு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்பது விதி. அதாவது மூன்றில் ஒரு பங்கு பயிர்கள் பாதிக்கப்பட்டு அவற்றுக்கு இழப்பீடு வழங்கப்பட்டால் கூட, காப்பீட்டு நிறுவனங்களுக்கு எந்த வகையிலும் வருவாய் இழப்பு ஏற்படாது என்பது தான் கணக்கு. ஆனால், 2022-23ஆம் ஆண்டில் காப்பீட்டு பிரிமியமாக ரூ.2319 கோடி வசூலித்த காப்பீட்டு நிறுவனங்கள்,
அதில் சுமார் 20%, அதாவது ரூ.560 கோடி மட்டுமே இழப்பீடாக வழங்கியிருக்கின்றன. மீதமுள்ள ரூ.1759 கோடியை பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள் அவற்றுக்கான லாபமாக சுருட்டிக் கொண்டன. 2022-23ஆம் ஆண்டில் 24.25 லட்சம் ஏக்கர் சம்பா நெல் காப்பீடு செய்யப்பட்ட நிலையில், அவற்றில் சுமார் 7 லட்சம் ஏக்கர் நிலங்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை
அவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.32,500 என்ற அதிகபட்ச இழப்பீடு வழங்கப்பட்டால் கூட, காப்பீட்டு நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படாது. ஆனால், தங்களுக்கு அளவுக்கு அதிகமாக லாபம் ஒதுக்கும் நிறுவனங்கள், உழவர்களை கண்ணீரில் ஆழ்த்துகின்றன. 2021-22ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் சம்பா நெற்பயிர்களுக்கான காப்பீட்டு பிரீமியமாக ரூ.2413 கோடி வசூலிக்கப்பட்ட நிலையில், உழவர்களுக்கான இழப்பீடாக ரூ.481 கோடி மட்டும் தான் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு கிடைத்த லாபத்தின் அளவு மட்டும் ரூ.1932 கோடி ஆகும். இப்படியாக ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தான் மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கிறதே தவிர, உழவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படுவதில்லை.
பயிர் காப்பீட்டு நிறுவனம் தொடங்கிடுக
கடந்த ஐந்தாண்டுகளில் பயிர்க்காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்தால், பயிர்க்காப்பீட்டுத் திட்டம் என்பது உழவர்களுக்கானது அல்ல... காப்பீட்டு நிறுவனங்களுக்கானது தான் என்பதை புரிந்து கொள்ள முடியும். காப்பீட்டுத் திட்டம் என்பது அதை செயல்படுத்தும் நிறுவனங்களின் நலனுக்காக இருக்கக்கூடாது; உழவர்களின் நலனுக்காகத் தான் இருக்க வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு, காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும்; அதன் மூலம் உழவர்களைக் காக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்