தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 19ம் தேதி வாக்குப்பதிவும், அதே நாள் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அதாவது ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.
ஜூலை 24ம் தேதி நிறைவு
இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மதிமுக துச்செயலாளர் வைகோ, அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி நிறைவு பெறுகிறது.
மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு
இந்நிலையில் தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 2ம் தேதி வேட்பு மனுத் தாக்கல், ஜூன் 9 வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள், ஜூன் 10 வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை, ஜூன் 12 வேட்பு மனுக்களைத் திரும்ப பெற கடைசி நாள், ஜூன் 19 காலை 9 மணி முதல் 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதேபோல, அசாம் மாநிலத்தில் ஜூன் 19-ம் தேதி 2 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.


