நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1996ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து கருத்து தெரிவித்தார். இதனால், அவர் அரசியலுக்கு வருவதாக பேசப்பட்டது. பின்னர், தனிக்கட்சி தொடங்குவார் எனவும், முதலமைச்சர் பதவியில் அமருவார் எனவும் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், அவர் அரசியல் குறித்து பேசும் நேரத்தில், இமயமலைக்கு சென்றுவிடுவார். இதையே வழக்கமாக ரஜினி கொண்டதால், அவரது ரசிகர்கள், அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற குழப்பத்திலேயேஇதுவரை இருந்து வருகின்றனர்.
தற்போது அதிமுக சசிகலா மற்றும் ஓ.பி.எஸ். என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதனால், அதிமுக தொண்டர்கள் எந்த அணியில் செயல்படுவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ரஜினி ரசிகர்கள், தலைமை செயலகம் பின்னணியில், ரஜினியை முதலமைச்சர் ஸ்டைலில் நடந்து செல்வது போலவும், அவருக்கு பின்னால் பாதுகாப்பு அதிகாரிகள் நடந்து செல்வது போலவும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
இதை பார்க்கும் பொதுமக்கள், ரஜினி மீண்டும் அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளனராக என்ற கேள்வியுடன், போஸ்டரை வெறிக்க பார்த்து செல்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'ரஜினி அரசியலுக்கு வருவரா, புதிய கட்சி துவங்குவாரா' என்ற கேள்விக்கு, 'பொறுத்திருந்து பாருங்கள்' என கூறினார்.
இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக் முன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பிரஜ ராஜ்ஜியம் கட்சியை தொடங்கியபோது, சென்னைக்கு வந்து ரஜினியை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சிரஞ்சீவி, விரைவில் ரஜினி அரசியலுக்கு வருவார் என கூறினார்.
எனவே, திடீரென நகர் பகுதியில் ரஜினியின் அரசியல் சார்ந்த போஸ்டரை பார்க்கும் போது, அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு, வழக்கம் போல பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
