தஞ்சாவூர்

 

தஞ்சையில் நடைப்பெற்ற மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், ஒற்றுமை, ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று அதன் நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் அறிவுரை வழங்கினார்.

 

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சியை தொடங்க உள்ளதையடுத்து ரஜினி மக்கள் மன்றம் பெயரில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளார்.

 

இதையடுத்து மாவட்டந்தோறும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

 

தஞ்சை மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தஞ்சை மாவட்டத் தலைவர் ரஜினிகணேசன் தலைமை தாங்கினார். இதில் ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர், பொதுச்செயலாளர் ராஜூமகாலிங்கம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

 

இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 10 பேர் வீதம் 14 ஒன்றியம், 21 பேரூராட்சி, மாநகராட்சி, 2 நகராட்சிகளில் இருந்து சுமார் 320-க்கும் மேற்பட்ட ரஜினிரசிகர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனுமதி கடிதத்துடன் வந்தனர்.

 

ஆலோசனைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொருவருக்கும் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. அதில் அவர்களது பெயர் உள்ளிட்ட சுயவிவரங்கள் மற்றும் எத்தனை ஆண்டு காலம் மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளார்கள், என்ன பதவிக்கு போட்டியிட விரும்புகின்றனர் என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விவரங்கள் இருந்தன. விண்ணப்பங்களை பெற்று கொண்ட உறுப்பினர்கள் அதை பூர்த்தி செய்து கொடுத்து பதிவு செய்து கொண்டனர்.

 

கூட்டம் தொடங்கியதும் ரஜினிகாந்த், நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கி பேசிய வீடியோ கால் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 

அதில் அவர், "தஞ்சை மாவட்ட மன்ற நிர்வாகிகளுக்கு வணக்கம். நாம் ஒற்றுமை, ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

 

நாம் எதையும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். இதில் சுயநலம் கிடையாது. பொது நலம் தான். அரசியலில் மாற்றத்தை கொண்டுவருவோம்.

 

ஆண்டவன் கொடுத்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நான் ஏற்கனவே கூறியதைப்போல உங்களது பெற்றோர், குடும்பத்தை முதலில் பார்த்துக்கொள்ளுங்கள். எந்த சண்டை, சச்சரவுகளுக்கும் நாம் இடம் கொடுக்க கூடாது.

 

நீங்கள் எனக்கு ஒத்துழைப்பு கொடுப்பீர்கள், கொடுக்க வேண்டும். ஒற்றுமை, ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் இருங்கள். உங்களுடன் ஆண்டவன் இருக்கிறான். நான் இருக்கிறேன்" என்று அவர் கூறினார்.