தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சை மற்றும் புதுச்சேரி நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.

இதற்கிடையில், கடந்த 8ம் தேதி இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து,பொதுமக்கள் தங்களது பணத்தை அனைத்து வங்கியிலும் மாற்றி கொள்ளலாம் என கூறியது. தற்போது, இதுபோன்று பணத்தை வங்கியில் மாற்றுபவர்கள் முறைகேட்டில் ஈடுபடாமல் இருக்க, அவர்களது, கை விரலில் மை தடவ வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பணத்தை மாற்றுபவர்களுக்கு மை வைக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தற்போது வங்கி பரிமாற்றத்தின்போது, வங்கி ஊழியர்கள், பொது மக்களின் இடது கை விரலில் மை வைத்தால், நாளை மறுநாள் நடக்க உள்ள தேர்தலுக்கு சிக்கலாகி விடும்.

எனவே, வங்கி ஊழியர்கள், கவனமாக செயல்பட்டு, பொதுமக்களின் வலது கை ஆட்காட்டி விரலில் மை வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.