பெட்ரோல் குண்டு வீச்சு: காவல்துறை மீது ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டு!
பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கை நீர்த்துப் போக செய்ய காவல்துறை முயற்சிப்பதாக ஆளுநர் மாளிகை குற்றம் சாட்டியுள்ளது
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பாக நேற்று பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கருக்கா வினோத்திடம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஓராண்டாக சிறையில் இருந்த தன்னை விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால், ஆத்திரத்தில் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பாஜகவினர் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கை நீர்த்துப் போக செய்ய காவல்துறை முயற்சிப்பதாக ஆளுநர் மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது. அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.
ஆந்திராவில் நாயுடு; தெலங்கானாவில் பாஜக: பவன் கல்யாணின் பலே கணக்கு!
முன்னதாக, ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை சம்பவ இடத்துக்கு அருகிலேயே போலீசார் மடக்கி பிடித்த நிலையில், குற்றவாளி தப்பியோடி விட்டதாக ஆளுநர் மாளிகை குற்றம் சாட்டியிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
இதனிடையே, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.