வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வானிலை மையம் கூறியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 3 செ.மீட்டர், சின்னக்கல்லார், ஏற்காடு மற்றும் நடுவட்டத்தில் தலா 2 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் சேலம், உதகை மற்றும் கடலூரில் தலா 1 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் குமரி, நெல்லை, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கனமழை மீண்டும் தீவிரமாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய 5 மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.