கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட இந்திய வறண்ட காற்றால் உள் மாவட்டங்களில் குளிர் அதிகரிக்கும்.

தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

அதேபோல் டிசம்பர் 15 மற்றும் 16ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் 17ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப அளவின் வேறுபாடு

இன்று முதல் 15ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

சென்னை வானிலை அப்டேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்

இதனிடையே சென்னை முதல் குமரி வரை கடலோர பகுதிகளில் வெப்பநிலை 18-21° அளவிற்கு குறைந்து காணப்படும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: வட இந்தியாவில் நிலவும் வலுவான உயரழுத்ததின் வறண்ட வாடைக்காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகம் உள்பட தென் இந்தியாவில் குளிர் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், தேனி, தென்காசி மதுரை, விருதுநகர் போன்ற உள் மாவட்டங்களில் இரவு முதல் அதிகாலை நேரத்தில் குறைந்தப்பட்ச வெப்பநிலை 16° முதல் 18°செல்சியஸ் அளவிற்கு காணப்படுகிறது.

வால்பாறை, உதகமண்டலம், கொடைக்கானல் பகுதிகளில் வெப்பநிலை 8° கீழ் குறைவதற்கும், உறைப்பனி நிலவுவதற்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை முதல் குமரி வரை கடலோர பகுதிகளில் வெப்பநிலை 18-21° அளவிற்கு குறைந்து காணப்படும்.

விவசாயிகளுக்கான தகவல்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு டிசம்பர் 15ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும், மழைக்கான வாய்ப்புகள் இல்லை. இந்த இடைவெளியை பயன்படுத்தி விவசாயிகள் அனைத்து விதமான வேளாண்மை பணிகளையும் உரமிடுதல், பூச்சிக்கட்டுப்பாடு, களைக்கட்டுப்பாடு, நடவு/தெளிப்பு போன்ற அனைத்தையும் திட்டமிடலாம். ஈரப்பதமான கீழைக்காற்றின் ஊடுருவல் அந்தமான் வரை முன்னேறியுள்ளது. டிசம்பர் 16 முதல் 18 வரை மூன்று நாட்கள் பரவலாக கடலோரம் & உள் மாவட்டங்களில் பனிப்பொழிவு குறைந்து மழை வானிலை திரும்பும் என தெரிவித்துள்ளார்.