நீலகிரி

ஊட்டியில் பெய்துவரும் தொடர் மழை மற்றும் வீசும் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் புகழ்பெற்ற ரோஜா பூங்காவில் உள்ள மலர்கள் உதிர்ந்தன. இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

ஊட்டியில் பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசிப்பதற்காக ஆண்டுதோறும் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதில் ஊட்டி ரோஜா பூங்கா சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடம்.

இந்தப் பூங்காவில் நான்காயிரம் ரகங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. அந்தச் செடிகளில் சிவப்பு, மஞ்சள், நீலம் உள்பட பல்வேறு நிறங்களில் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்க்கும் யாருடைய மனதும் கொள்ளைப் போய்விடும். இதனால் சுற்றுலாப் பயணிகள் ரோஜா மலர்களின் அருகில் நின்று தாமி எடுத்து மகிழ்வர்.

இந்த நிலையில் ஊட்டியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்தும், பலத்த காற்று வீசியும் வருவதால் ரோஜா பூங்காவில் உள்ள மலர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் உதிர்ந்து வருகின்றன. மேலும் கடந்த வாரம் பெய்த மழையால் ரோஜா செடிகளில் பூத்திருந்த மலர்கள் அழுகின.

குறிப்பாக ரோஜா செடிகளில் உள்ள இதழ்கள் உதிர்வதுடன், செடிகளில் புதிதாக வரும் மொட்டுகள் மலர முடியாமல் போகிறது. அதோடு செடிகளில் உள்ள இலைகளும் உதிர்ந்து வருகின்றன. பூங்காவில் உள்ள அழுகிய மற்றும் உதிர்ந்த மலர்களை அகற்றும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ரோஜா மலர்கள் உள்ள செடிகளில் இருந்து மலர்கள் உதிர்ந்து காணப்படுவதால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ரோஜா பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.